உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அணி மாறிய செந்தில்முருகன் கட்சி மாறி விசுவாசம்

அணி மாறிய செந்தில்முருகன் கட்சி மாறி விசுவாசம்

ஈரோடு:ஈரோடு, அக்ரஹார வீதியை சேர்ந்தவர் செந்தில்முருகன். அ.தி.மு.க.,வில் பொறுப்பு வகிக்காமல், வி.ஐ.பி.,க்களுடன் மட்டும் தொடர்பில் இருந்தார். கடந்த, 2023ல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி சார்பில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.அதுவரை, உள்ளூர் அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கே இவரை தெரியாது. இரட்டை இலை சின்னத்துக்கு அனுமதி கடிதம் வழங்கும் பிரச்னையில், தேர்தல் ஆணைய உத்தரவாலும், பன்னீர்செல்வம் அழுத்தத்தாலும், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். பன்னீர்செல்வம் மீதான அதிருப்தியில், பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டார். உடனே, ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளராகவும் அறிவிக்கப்பட்டார். இம்முறையும் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால், அ.தி.மு.க.,வே தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், சுயேட்சையாக போட்டியிட முடிவெடுத்து, மனுத்தாக்கல் செய்தார். 'இதனால், தன் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை' எனவும் பேட்டி கொடுத்தார். இதையடுத்து, கட்சித் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. கட்சியில் இருந்து அவரை நீக்கினர். இதனால், பழனிசாமி மீது அதிருப்திக்குள்ளானவர், ஈ.வெ.ரா., கொள்கையை பின்பற்றும் ஒரே கட்சி தி.மு.க., தான் என்று சொல்லி, அக்கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான முத்துசாமி முன்னிலையில் தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை