தென்பெண்ணையாற்றில் கழிவுநீர்: தடுக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
சென்னை:'தமிழகத்தில் விரைவில் பருவமழை துவங்க இருப்பதால், தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, கர்நாடக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு, கர்நாடக மாநிலத்தில் உள்ள தென்பெண்ணையாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீர் வருகிறது. பாசனத்திற்காக கெலவரப்பள்ளி அணை திறக்கப்பட்ட போது, அதிக அளவில் ரசாயனம் கலந்த தண்ணீர், நுரை பொங்கியபடி வெளியேறியது. குற்றச்சாட்டு
இதனால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். தென்பெண்ணையாற்றில், சுத்திகரிக்கப்படாத பெங்களூரு மாநகராட்சி கழிவுநீர், தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுநீர் அதிக அளவில் கலப்பதே, இதற்கு காரணம் என்று விவசாயிகளும், பொதுமக்களும் குற்றஞ்சாட்டினர்.இது தொடர்பாக, கடந்த டிசம்பர் 5ல் ஊடகங்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:கர்நாடக அரசின் தலைமை செயலர் தாக்கல் செய்த அறிக்கையில், 'தென்பெண்ணையாற்றின் கர்நாடக பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, 1,200 கோடி ரூபாயில், 10 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க, பெங்களூரு குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும்' என கூறப்பட்டுள்ளது.தமிழக அரசின் தலைமை செயலர் தாக்கல் செய்த அறிக்கையில், 'தென்பெண்ணையாற்றிலும், அதன் துணை ஆறுகளிலும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதை, கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.தென்பெண்ணையாறு நீர் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தை குழு, ஒன்பது கூட்டங்களை நடத்தி உள்ளது. இதில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இக்குழு, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் கழிவுநீர் கலக்கும் இடங்களை நேரில் பார்வை யிட்டு, கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர் மாசுபட்டு, கருப்பு நிறத்தில், துர்நாற்றத்துடன், வெள்ளை நுரையாக வருவதை உறுதிப்படுத்தி உள்ளது. அறிக்கை தாக்கல்
தமிழகத்தில் பருவமழை விரைவில் துவங்க இருப்பதை கருத்தில் வைத்து, தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, கர்நாடக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் ஆக., 21ல் நடக்கும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.