இளைஞர்களுக்கு திறன் பயிற்சி துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
சென்னை:கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, வேலை வாய்ப்புகள் வழங்க, துணை முதல்வர் உதயநிதி உத்தரவிட்டுள்ளார்.தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம், துணை முதல்வர் உதயநிதி தலைமையில், நேற்று அவரது முகாம் அலுவலகத்தில் நடந்தது. மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வாயிலாக, கிராமப்புற ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சுய உதவி குழுக்கள் வாயிலாக, வங்கி கடனுதவி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது.மகளிர் சுய உதவி குழுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 35 வயது வரை உள்ள, கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு 60 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குகிறது. திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு வழங்க, மாநிலம் முழுதும் 50 இடங்களில், இளைஞர் திறன் திருவிழாக்கள் மற்றும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.இதில், ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவன செயல் இயக்குனர் ஸ்ரேயா பி சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.