பாலங்கள் கட்டும் முன் மண் பரிசோதனை, தண்ணீர் பரிசோதனை அவசியம்: வேலு
சென்னை:'கட்டடங்கள் மற்றும் பாலங்கள் கட்டும் போது, மண் பரிசோதனை மட்டுமின்றி, தண்ணீர் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும்,'' என, நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு அறிவுறுத்தினார். அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நெடுஞ்சாலை துறைக்கு, 45 உதவி பொறியாளர்களும், பொதுப்பணி துறைக்கு, 165 உதவி பொறியாளர்களும் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான அறிமுகம் மற்றும் அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் நேற்று நடந்தது. இதில், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் வேலு பேசியதாவது: பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளவர்களில், 91 பெண் உதவி பொறியாளர்களும் உள்ளனர். கட்டுமான துறையில், இன்று பெண்களும் சாதித்து வருகின்றனர். கல்லணை உள்ளிட்ட கட்டுமானங்கள், தமிழர்களின் பொறியியல் திறமைக்கு சான்றாக விளங்குகின்றன. அரசு கட்டடங்கள் பராமரிப்பு, சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள் பராமரிப்பு பணிகளை முறையாக பொறியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். இயற்கை பேரிடர் காலங்களில், சிறப்பாக செயல்பட வேண்டும். அரசு கட்டடங்கள், பள்ளிகள், திரையரங்குகள், தேர்கள் போன்றவற்றை முழுமையாக ஆராய்ந்த பின்னரே, உறுதித்தன்மை சான்றிதழ்களை பொறியாளர்கள் வழங்க வேண்டும். நடைமுறையில் உள்ள சட்டங்கள், விதிகள், சுற்றறிக்கைகள் போன்றவற்றை நன்றாக படிக்க வேண்டும். அதன் அடிப்படையில், பணிகளை மேற்கொள்ள வேண்டும். கட்டடங்கள் மற்றும் பாலங்கள் கட்டும் போது, மண் பரிசோதனை மட்டுமின்றி, தண்ணீர் பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும். உப்பு அதிகம் இல்லாத தண்ணீரை கட்டுமானத்திற்கு பயன்படுத்த வேண்டும். கட்டுமான பொருட்களின் தரம், சிமென்ட் மூட்டையின் எடை மற்றும் தரம், மணலின் துாய்மை போன்றவற்றையும் பொறியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சிகிச்சை தோல்வி அடைந்தாலோ, வழக்கில் தோற்றாலோ, மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள். ஆனால், கட்டுமானத்தில் குறைபாடு இருந்தால், பொறியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். இதை புதிய பொறியாளர்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா, நெடுஞ்சாலைத் துறை செயலர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.