உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்ரீசன் பார்மா உரிமையாளர் ம.பி., கோர்ட்டில் ஆஜர்

ஸ்ரீசன் பார்மா உரிமையாளர் ம.பி., கோர்ட்டில் ஆஜர்

சென்னை:சென்னையில் கைது செய்யப்பட்ட, 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர், மத்திய பிரதேச மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மத்திய பிரதேச மாநிலத்தில், 'கோல்ட்ரிப்' எனும் இருமல் மருந்து குடித்து, 22 குழந்தைகள் பலியாகினர். இதுகுறித்து, அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான, கோல்ட்ரிப் இருமல் மருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள, 'ஸ்ரீசன் பார்மா' என்ற நிறுவனத்தில் தயாரிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் வந்த மத்திய பிரதேச மாநில போலீசார், சென்னை அசோக் நகரில் வசித்து வரும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன், 75, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், ரங்கநாதன் மனைவியுடன் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர். அதன்பின், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விமானத்தில் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து, காரில் அழைத்துச் சென்று, மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பராசியா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ