எஸ்.ஆர்.எம்., தமிழ் பேராய விருது தமிழறிஞர்கள் 11 பேர் கவுரவிப்பு
செங்கல்பட்டு: எஸ்.ஆர்.எம்., தமிழ் பேராயம் சார்பில், தமிழறிஞர்கள் 11 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், 'தமிழ் பேராயம்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக, தமிழ் இலக்கிய படைப்பாளிகள், தமிழ் இதழ், தமிழ் சங்கங்கள், தமிழ் அறிஞர்களுக்கு, பல்வேறு தலைப்புகளின் கீழ், 12 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழ் பேராயத்தின் 2025ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு, எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனத்தின் நிறுவனர் பாரிவேந்தர் தலைமை வகித்தார். தமிழ் பேராய தலைவர் கரு.நாகராஜன் வரவேற்றார். ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கற்பக விநாயகம், தமிழறிஞர்கள் 11 பேருக்கு விருதுகளை வழங்கினார். விழாவில், மணிமேகலை பிரசுரம் வெளியிட்ட, 'எகிப்தில் தமிழர் நாகரிகம்' என்ற புத்தகத்திற்கு, பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது வழங்கப்பட்டது. இ தை, பதிப்பகத்தின் நிர்வா க இயக்குநர் ர வி தமிழ்வாணன் மற்றும் நுாலாசி ரியர் அமுதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பாரிவேந்தர் பேசுகையில், ''எஸ்.ஆர்.எம்., பல்கலையின் முக்கிய அங்கமாக தமிழ் பேராயம் உள்ளது. தமிழ் பேராயத்தின் மூலம் இதுவரை, 3 கோடி ரூபாய் மதிப்புகளில் விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. ''இந்த விருதுகள் வழங்குவதில், எஸ்.ஆர்.எம்., நிர்வாகம் தலையிடுவது இல்லை. தமிழ் பேராயத்தைச் சேர்ந்தோர், விருதாளர்களை தேர்வு செய்கின்றனர்,'' என்றார். விழாவில், சுரேஷ் இந்திரஜித், கவிஞர் இளம்பிறை, மருதன், பத்மஜா நாராயணன், சசி குமார், அமுதன், பிருந்தா சீனிவாசன், வதிலை பிரபா, செல்லப்பன், தெய்வநாயகம் உள்ளிட்டோர் விருது பெற்றனர். விழாவில், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன பதிவாளர் பொன்னு சாமி, வளாக நிர்வாகி அருணாச்சலம் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.