உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான்கு ஆண்டுகளில் ரூ.10.30 லட்சம் கோடி முதலீடு மண்டல முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஸ்டாலின் தகவல்

நான்கு ஆண்டுகளில் ரூ.10.30 லட்சம் கோடி முதலீடு மண்டல முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஸ்டாலின் தகவல்

துாத்துக்குடி:''கடந்த நான்காண்டுகளில், 10 லட்சத்து 30,348 கோடி ரூபாய் முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளது,'' என, துாத்துக்குடியில் நடந்த மண்டல முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். துாத்துக்குடியில் நேற்று முன்தினம், மண்டல அளவிலான முதலீட்டாளர்கள் மாநாட்டில், நான்கு புதிய நிறுவனங்களின் வணிக செயல்பாட்டை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். அவரது முன்னிலையில், 32,554 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட உள்ள தொழில்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை முதன்மையாக கொண்டு, அதற்கான உள்கட்டமைப்புகளை, மாநில அரசு மிக சிறப்பான வகையில் உருவாக்கி இருக்கிறது. முதலீட்டாளர்கள் மாநாடுகளையும், முதலீட்டாளர்கள் உடனான சந்திப்புகளையும் தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம். தென்மாவட்டங்களில் உள்ள தொழில் பூங்காக்களில் அமைக்கப்படும் தொழிற்சாலை களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, எப்போது வேண்டுமானாலும் தொழில் துவங்கலாம் என்ற தயார் நிலையில் தொழிற் பூங்காக்கள் உள்ளன. தி.மு.க., ஆட்சிக்கு வந்த உடனே, 2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என, இலக்கு நிர்ணயித்தோம். அதை அடைய திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். உயர் தொழில்நுட்பம் சார்ந்த செமிகண்டக்டர் உற்பத்தி, மின் வாகனங்கள் உற்பத்தி, சோலார் செல்கள், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, தகவல் தரவு மையங்கள் போன்ற அனைத்து துறைகளிலும் முன்னேறுவதற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறோம். நாங்கள் எடுத்து வரும் பெரு முயற்சியின் பலனாக, கடந்த நான்காண்டுகளில், 10 லட்சத்து 30,348 கோடி ரூபாய் அளவிற்கு உறுதி செய்யப்பட்ட முதலீடு கிடைத்துள்ளது. இதன் மூலம், 32 லட்சத்து 28,945 பேருக்கு உறுதிய ளிக்கப்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், 898 திட்டங்களை ஈர்த்திருக்கிறோம். தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த் தக துறை சார்பில், தற்போது, 32,554 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 49,845 பேர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு என்ற வகையில், 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தவிர, சிறு, குறு தொழில்கள் துறை சார்பில், 244 கோடியே 45 லட்சம் ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 1,056 பேர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 19 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. 'எந்த விதமான தொழிற்சாலை அமைத்தாலும், அதற்கான திறன்கொண்ட பணியாளர்கள் இங்கு இருக்கின்றனர்' என, தொழிலதிபர்கள் என்னிடம் அடிக்கடி சொல்கின்றனர் . உங்களுக்கு தேவையான அனைத்தும் தமிழகத்தில் இருக்கிறது; உங்களின் முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வாருங்கள் என்று அன்போடு அழைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை