உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்திற்கு ஓரவஞ்சனை ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்திற்கு ஓரவஞ்சனை ஸ்டாலின் கண்டனம்

'மத்திய பட்ஜெட் என்றாலே, தமிழகத்திற்கு ஓரவஞ்சனை தானா? மத்திய பட்ஜெட்டில், தமிழகம் என்ற பெயர் கூட இடம் பெறவில்லை' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:மத்திய பட்ஜெட் என்றாலே, தமிழகத்திற்கு ஓரவஞ்சனை தானா? தமிழகம் என்ற பெயர் கூட, தொடர்ந்து இடம்பெறுவது இல்லையே? எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே... அதில் ஒன்றைக் கூடவா உறுதிசெய்து, அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை? நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், கோவை, மதுரை மெட்ரோ ரயில் எதையுமே கொடுக்காதது ஏன்; எது தடுக்கிறது? பொருளாதார ஆய்வறிக்கை, உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை, 'நிடி ஆயோக்' அறிக்கை என, மத்திய அரசின் அனைத்து அறிக்கைகளிலும், முதன்மையான இடத்தை பிடிக்கிறது தமிழகம். பக்கத்துக்கு பக்கம் தமிழகத்தின் செயல்பாடுகளுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால், பட்ஜெட்டில் மட்டும், இந்த ஆண்டும் தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன்? தமிழகம் ஏற்காத கொள்கைகளையும், மொழியையும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில், சிறு துளியையாவது நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டாமா? மத்திய அரசு தன் திட்டங்களில், தன் பங்குத் தொகையைக் குறைத்து கொண்டே வருவதால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு திட்டங்களில், மிகவும் குறைவாக மானிய தொகையை வழங்கும் மத்திய அரசு, அதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழகத்திற்கு மட்டும் விதித்துள்ளது. விளம்பர மோகம் உடைய மத்திய அரசு, திட்ட விளம்பரங்களில், மத்திய அரசின் முத்திரை இடம் பெறாவிட்டால், திட்டம் சரியாகவும், செம்மையாகவும் செயல்படுத்தப்பட்டு இருப்பினும், நமக்கு சேர வேண்டிய திட்ட நிதியை விடுவிப்பதில்லை. விளம்பரம் ஒன்றையே பாராட்டும் மத்திய அரசு, மக்கள் நலனில் எந்தவொரு அக்கறையையும் காட்ட மறுக்கிறது.வெற்றுச்சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கை மூலமாக, நாட்டு மக்களை வழக்கம் போல் ஏமாற்றும் பா.ஜ.,வின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது. எந்த மாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ளதோ, எங்கு பா.ஜ., கூட்டணி ஆட்சியில் உள்ளதோ, அந்த மாநிலத்துக்கு மட்டும் தான் திட்டங்களும், நிதியும் அறிவிக்கப்படும் என்றால், 'மத்திய பட்ஜெட்' என, இதை அழைக்க வேண்டிய அவசியம் என்ன?இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SAMANIYAN
பிப் 03, 2025 15:16

உங்களுக்கு 40 MP கொடுத்ததற்கு பதிலாக பிஜேபிக்கு 20 MP கொடுத்திருந்தாலும் தமிழ்நாடுக்கு அல்லி கொடுத்திருப்பார்கள் பீகாரை போல.. வெட்டியா உனக்கு வோட் போட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதே உண்மை ..


சமீபத்திய செய்தி