| ADDED : டிச 30, 2025 07:23 AM
திருத்தணி: 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுதும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரசார சுற்றுப்பயணம் செய்து வருகிறார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வீரகநல்லுாரில் நேற்று அவர் பிரசாரம் செய்தார். அப்போது பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டது. சென்னை ---- திருத்தணி ரயிலில், போதை வாலிபர்கள் ரீல்ஸ் மோகத்தில் வடமாநில இளைஞரை வீச்சரிவாளால் வெட்டி உள்ளனர். இது பற்றி எதையும் தெரிந்து கொள்ளாத முதல்வர், திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் பேத்தி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. தமிழகத்தில் போதை நடமாட்டம் அதிகரித்துள்ளது. திருநெல்வேலியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி, துளியும் அச்சமின்றி பொதுவெளியில் மது அருந்துகிறார். அது தொடர்பான வீடியோவும் வெளியாகி பகீர் கிளப்புகிறது. தி.மு.க., ஆட்சியில் எதையும் திருடுவர். லேட்டஸ்ட்டாக கிட்னியை திருடுகின்றனர். 'நீட்' தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களிடம் உள்ளது என துணை முதல்வர் உதயநிதி கூறினார். ஆனால், 'நீட்'டை ரத்து செய்வது முடியாது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக இப்படி எத்தனையோ பச்சைப் பொய்கள் பேசினர். வரும் 2026ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும். வந்ததும், தாலிக்கு தங்கம், திருமண உதவித் திட்டம் போன்றவை மீண்டும் செயல்படுத்தப்படும். நெசவு தொழில் முழுமையாக நசுங்கி உள்ளது; விரைவில் விடிவு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். பிரசார கூட்டத்தில், அரக்கோணம் முன்னாள் எம்.பி., கோ.அரி, அ.தி.மு.க., திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலர் ரமணா, திருத்தணி ஒன்றிய செயலர் இ.என்.கண்டிகை ரவி, பொதட்டூர்பேட்டை அ.தி.மு.க., நகர செயலர் ரவிச்சந்திரன், பள்ளிப்பட்டு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் டி.டி.சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.