தனியார் ஹஜ் ஒதுக்கீட்டை மீட்க பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை:'இந்தியாவில், தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்தை, சவுதி அரேபியா அரசிடம் பேசி, பெற்றுத்தர வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.அதில், அவர் கூறியிருப்பதாவது:நடப்பாண்டு தமிழகம் உட்பட நாடு முழுதும் ஹஜ் பயணத்திற்கு தயாராகி வரும் ஆயிரக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் மத்தியில், தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த புனித பயணத்தை மேற்கொள்ள, முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை செலவு செய்கின்றனர். நடப்பாண்டு ஹஜ் பயணம், ஜூன் 4 முதல் 9 வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவில் இருந்து பயணியர் வழக்கமாக, மே மாதம் சவுதி அரேபியாவுக்கு பயணத்தை துவக்குவர்.கடந்த ஆண்டு 1.75 லட்சம் இந்திய ஹஜ் பயணியர், புனித பயணத்தில் பங்கேற்றனர். நடப்பாண்டு ஜனவரியில், இந்தியா - சவுதி அரேபியா உடனான, இரு தரப்பு ஒப்பந்தத்தில் 1.75 லட்சம் ஹஜ் பயணியருக்கான இடம் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீடு 70:30 என்ற விகிதத்தில், மாநில ஹஜ் கமிட்டிகள் மற்றும் தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் இடையே பிரிக்கப்பட்டது. அதன்படி நடப்பாண்டுக்கான ஹஜ் ஒதுக்கீட்டில், தனியார் ஹஜ் குழுக்களுக்கு, 1.22 லட்சம் இடங்கள், தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு, 52,507 இடங்கள் ஒதுக்கப்பட்டன.இந்நிலையில், இந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீட்டை, சவுதி அரேபியா குறைத்துள்ளது. அதனால், தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த, 52,000 இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த முடிவு, பணம் செலுத்தியுள்ள, ஹஜ் பயணியர் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்னையை, சவுதி அரேபியா அரசிடம் எடுத்து சென்று, ஹஜ் ஒதுக்கீட்டில் முந்தைய அளவை, மீண்டும் கொண்டு வர வேண்டும். பிரதமர் தலையிட்டு, ஹஜ் பயணியருக்கான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.