ரூ.5 லட்சம் மதிப்புள்ள சிலை திருட்டு இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை
சென்னை:சிலை திருட்டு வழக்கில் கைதான இரண்டு பேருக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2011, ஆக.,16ல், வேலுார் மாவட்டம், சோழவரம், வரதராஜப் பெருமாள் கோவிலில், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, இரண்டரை அடி உயரமுள்ள பஞ்சலோக வரதராஜப் பெருமாள் சிலை உட்பட, நான்கு சிலைகள் திருடு போனது. இது குறித்து, வேலுார் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து, தஞ்சாவூர் மாவட்டம், அம்மன் பேட்டையை சேர்ந்த ஸ்டாலின், 44, உரந்தராயன் குடிகாடு பகுதியை சேர்ந்த நீலகண்டன், 50, காஞ்சிபுரத்தை சேர்ந்த தேவராஜ், 50, ேஷக் காதர், 46, திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தை சேர்ந்த முகமது அப்பாஸ், 40, மாமல்லபுரத்தை சேர்ந்த பத்மநாபன், 46, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நான்கு சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை எழும்பூர் பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் கோதண்டராஜ் முன் நடந்து வந்தது. வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், கைதான நபர்களில் தேவராஜ் இறந்துவிட்டார். மற்றவர்கள் ஜாமினில் உள்ளனர். அரசு சார்பில், குற்றவியல் கூடுதல் வழக்கறிஞர் வாஷிங்டன் தனசேகரன் ஆஜராகி வாதாடினார். இவ்வழக்கில் தகுந்த சாட்சியங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், திருநீலகண்டன், முகமது அப்பாஸ் ஆகியோருக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், மற்றவர்களை விடுதலை செய்தும், நீதிபதி உத்தரவிட்டார்.