உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் போராட்டம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் போராட்டம்

சென்னை : “சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடாவிட்டால், தமிழகம் முழுதும் தொடர் போராட்டம் நடத்தப்படும்,” என, பா.ம.க., தலைவர் அன்புமணி எச்சரிக்கை விடுத்தார்.தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி, பா.ம.க., சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, த.மா.கா., பொதுச்செயலர் விடியல் சேகர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேசியது:பீஹார், தெலுங்கானா மாநில அரசுகள், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகும், மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையிலேயே பொய் சொல்கிறார். தமிழகத்தில் வசிக்கும் பல்வேறு சமூகத்தினர், எத்தனை சதவீதம் உள்ளனர்; அவர்களின் கல்வி, பொருளாதார நிலை குறித்து தரவுகள் இருந்தால்தான், அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த முடியும்.அரசியல் கணக்கு பார்த்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கின்றனர். தெருவில் திரியும் நாய்கள், மாடுகள் குறித்து கூட கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மறுக்கின்றனர்.வரும் மார்ச் 14ல் துவங்கும் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும். இல்லையெனில், தமிழகம் முழுதும், தொடர் போராட்டங்களை நடத்துவோம். ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக, எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறோம்.இவ்வாறு, அவர் பேசினார்.

பா.ம.க.,வுடன் இணைந்த

ஜெகன் மூர்த்திபா.ம.க., நடத்திய ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க., கூட்டணியில், அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக உள்ள புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “வன்னியர், பட்டியலின ஒற்றுமைக்காகவே, பா.ம.க.,வுடன் இணக்கமாக இருக்கிறோம். தமிழகத்தின் பெரும் சமூகங்கள் இணைந்திருப்பது பலரின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை