மேலும் செய்திகள்
கடும் பாறை சிலையாகுமே ... குரு போதனை உளியாகுமே !
01-Sep-2024
சென்னை,:''சிறந்த பள்ளி என்ற பெயர், தரமான உள்கட்டமைப்பு மட்டுமே நல்ல கல்வியை கொடுக்காது; நல்ல ஆசிரியர்களின் உழைப்பும் முக்கியம். மாணவர்கள் எதை கற்க வேண்டும்; எதை கற்கக் கூடாது என்பதை, ஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும்,'' என. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.சென்னை கிண்டியில் நேற்று நடந்த, அகர்வால் கல்வி அறக்கட்டளை பொன்விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:கல்வி என்பது என் மனதுக்கு என்றும் நெருக்கமானது. அத்தகைய கல்வி தான் ஒருவருக்கு சாலச்சிறந்த பரிசு. கல்வி ஒருவரை எப்படி உயர்த்தும் என்பதை பார்த்தவன் நான். என் வாழ்க்கை கல்வியை விட சிறந்தது வேறு எதுவுமில்லை என்பதை உணர்த்தியது.நான் வளர்ந்த கிராமத்தில், ஆரம்ப பள்ளி மட்டுமே இருந்தது. உயர்கல்விக்காக, 6 கி.மீ., துாரம் வெறுங்காலில் நடந்து செல்ல வேண்டும். அப்படி செல்லும் போது தான், நன்கு படித்து சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என்பதை உணர்ந்தேன்.சில ஆண்டுகளாக நாம் கல்வியில் சிறந்து, முன்னேற்றங்களை அடைந்து வருகிறோம். பொருளாதாரம், மரபியல், ரோபோடீக்ஸ் ஆகியவற்றில் தரத்தை உயர்த்துவதிலும், நாம் கவனம் செலுத்த வேண்டும்.நம் மக்கள் தொகையில், 24 சதவீத பேர், 14 வயது; 50 சதவீத பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இவர்கள் கையில் தான், நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பு உள்ளது. நம் மாணவர்கள் மனப்பாடம் செய்து கற்பதை விட, ஏன், ஏதற்கு என்று கேள்வி எழுப்ப கூடியவர்களாக மாற்ற வேண்டும். அதை உருவாக்க வேண்டியது ஆசிரியர்களின் பொறுப்பு.பாடம் கற்பித்தலில் நவீன கல்வி முறை, டிஜிட்டல் தொழில் முறை உள்ளிட்டவற்றை, மாணவர்கள் இடையே கொண்டு சேர்க்க வேண்டும். சிறந்த பள்ளி என்ற பெயர், தரமான உள்கட்டமைப்பு மட்டுமே நல்ல கல்வியை கொடுக்காது. அதற்கு நல்ல ஆசிரியர்களின் உழைப்பும் முக்கியம்.வருங்காலத்தில் மாணவர்களுக்கு எதை கற்க வேண்டும்; எதை கற்கக்கூடாது என்பதை கற்றுத்தர வேண்டும். இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, நம் மாணவர்களால் மட்டுமே முடியும். இன்று உலக நாடுகள், இந்தியாவிடம் இருந்து பலவற்றை எதிர்பார்க்கின்றன. வளர்ந்த நாடுகளில், மக்கள் தொகை முதுமையடைந்து வரும் நிலையில், உலகெங்கும் திறமை உள்ளவர்களின் தேவையை பூர்த்தி செய்வதில், இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.
01-Sep-2024