மதிய உணவுக்காக 4 கி.மீ., நடக்கும் மாணவர்கள்
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கும், அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கும், 2 கி.மீ., துாரம் உள்ளது. இப்பள்ளியில் பயிலும், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதிய உணவுக்காக, விடுதிக்கு சென்று திரும்புகின்றனர்.இம்மாணவர்கள், பகல், 12:20 மணிக்கு வகுப்பு முடிந்து, விடுதிக்கு சென்று, 1:00 மணிக்குள் மதிய உணவு சாப்பிட்டு விட்டு, மீண்டும் பள்ளிக்கு வர வேண்டும்.அதேநேரம், 2 கி.மீ., துாரமுள்ள விடுதிக்கு சென்று வர, எந்த போக்குவரத்து வசதியும் இல்லை. அதனால், மதிய வேளைகளில், மாணவர்கள் சாலைகளில் நின்று, அவ்வழியாக செல்வோரிடம் 'லிப்ட்' கேட்கும் பரிதாப நிலை உள்ளது. அப்படியே சென்று திரும்பினாலும், உரிய நேரத்திற்குள் வகுப்புகளுக்கு வர முடியவில்லை என்கின்றனர்.மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், இலவச பஸ் பாஸ் என பல சலுகைகள் வழங்கப்பட்டு உள்ள போதும், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படாததும், பள்ளிக்கும், விடுதிக்குமான துாரம் அதிகமாக இருப்பதும், மாணவர்களை அலைச்சலுக்கு உள்ளாக்கி, படிப்பில் கவனக்குறைவை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். மாணவர்களின் கல்வி, பாதுகாப்பு கருதி உரிய நடவடிக்கை எடுக்க பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.