சூலுார்: வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில், பண பரிவர்த்தனை தொடர்பாக தேர்தல் கமிஷன், வங்கிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்யும் வகையிலும், தேர்தல் பிரசாரத்தில் ஆரோக்கியமான போட்டியை வேட்பாளர்களிடையே உருவாக்கும் வகையிலும், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்களை வழங்குவதை தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வங்கிகளுக்கு அறிவுரை
பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் தொகுதி முழுக்க பம்பரமாக சுற்றி கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும்,ஆன்லைன் வாயிலாக நடக்கும் பணவர்த்தனைகளும் கண்காணிக்கப்படுகின்றன.சந்தேகத்துக்கு இடமான வகையில் பரிவர்த்தனை நடந்தால், அதைப்பற்றிய தகவல்களை, மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வங்கி நிர்வாகத்திடம் இருந்து பெற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.தேர்தல் காலத்தின் போது, ஒரு வங்கி கணக்கில் இருந்து பல்வேறு நபர்களின் கணக்குக்கு, ஆர்.டி.ஜி.எஸ்., முறையில் பண பரிவர்த்தனை நடந்தால் அந்த தகவலை, தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பிரிவுக்கு தகவல்
எந்தவொரு பரிவர்த்தனையும் இல்லாத வங்கி கணக்குக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், சந்தேகத்துக்கு இடமான வகையில், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வரவு வைக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து தேர்தல் பிரிவுக்கு தகவல் அளிக்க வேண்டும். தேர்தல் காலத்தில், அரசியல் கட்சியின் வங்கி கணக்குகளின் வரவு -செலவு விபரங்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.சந்தேகத்துக்கு இடமான வகையில் எத்தகைய பண பரிவர்த்தனையாக இருப்பினும் வங்கிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். நேர்மையாகவும், சுமூகமாகவும் தேர்தல் நடத்த வங்கி நிர்வாகங்களும் ஒத்துழைக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
ஏ.டி.எம்., மெஷின் பணம்
ஏ.டி.எம்., இயந்திரங்களில் வைக்க கொண்டு வரும் பணத்துக்கு வங்கியில் இருந்து பெறப்பட்ட உரிய ஆவணங்கள் வாகனத்தில் இருக்க வேண்டும். அந்த ஆவணத்தில் உள்ள 'க்யூ ஆர்' கோடை, பறக்கும் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள மொபைல் ஆப் வாயிலாக ஸ்கேன் செய்யப்படும். அதில் அனைத்து விபரங்களும் தெரியும். இரு விபரங்களை சரிபார்த்த பின், சந்தேகம் எழாமல் இருக்கும் பட்சத்தில் பணத்தை கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். இல்லையெனில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.