கோடநாடு எஸ்டேட் மேலாளருக்கு சம்மன் சூடுபிடிக்கிறது கொலை, கொள்ளை வழக்கு
கோவை:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், விசாரணைக்கு ஆஜராக, எஸ்டேட் மேலாளருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் 'சம்மன்' அனுப்பினர்.நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு, 2017ல் கொலை, கொள்ளை குற்றங்கள் நடந்தன.இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த, 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, ஊட்டி கோர்ட்டில் நடக்கிறது. வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் பலியானார். தற்போது சி.பி.சி.ஐ.டி., போலீசார், வழக்கை மறு விசாரணை செய்கின்றனர்.இதற்காக, 500-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பலருக்கு சம்மன் அனுப்பி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.இந்நிலையில், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.அவரை பிப்.,4ல், கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அலுவலகத்தில், விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர். பல ஆண்டுகளாக, எஸ்டேட் மேலாளராக நடராஜன் பணியாற்றியிருப்பதால், பல விவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.