UPDATED : ஆக 03, 2025 01:56 AM | ADDED : ஆக 02, 2025 07:39 PM
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், அரசு முதியோர் இல்லங்கள் அமைக்கும்படி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், அதிசய குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், 'தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், குறைந்தபட்சம், 150 பேர் தங்கும் அளவிற்கு முதியோர் இல்லங்களை கட்டாயம் அமைக்கும்படி, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லம் அமைக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அடுத்த ஆறு மாதத்திற்குள் இந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்றால், மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மனு விபரம்: முதியோரின் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 2024 - -25ல், 1.17 கோடி ரூபாய் முதியோர் நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, தனியார் தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து, முதியோர் நலனுக்கான பணிகளிலும் அரசு ஈடுபட்டுள்ளது. இலவச தொலைபேசி எண் உருவாக்கப்பட்டு, அதன் வாயிலாகவும் உதவி கேட்கும் முதியோருக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படுகின்றன. இவை எதையும் கவனத்தில் கொள்ளாமல், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டாயம் முதியோர் இல்லம் அமைக்க வேண்டும் என்பது, அரசின் நிர்வாக ரீதியான முடிவுக்கு உட்பட்டது. அதில், நீதிமன்றம் தலையிட்டு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்த நீதிபதிகள், இதுதொடர்பாக எதிர்மனுதாரர் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்தி வைத்தனர். -டில்லி சிறப்பு நிருபர்-