இளைஞர் காங்., தலைவராக சூரியபிரகாஷ் தேர்வு
சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக, சூரியபிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை, அகில இந்திய இளைஞர் காங்., தலைவர் உதய பானு நேற்று வெளியிட்டார். தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததும், அவரது தலைமையிலான நிர்வாகம், கடந்த ஜன., மாதம் கூண்டோடு கலைக்கப்பட்டது.மாநிலத் தலைவர், துணைத் தலைவர்கள், பொதுச் செயலர்கள், மாவட்டத் தலைவர்கள், சட்டசபை தொகுதி தலைவர்கள், மண்டலத் தலைவர்கள் போன்ற பதவிகளுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக கடந்த ஜன.,18 முதல் பிப்., 27 வரை தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவில், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை ஆதரவாளரான சூரியபிரகாஷ், அதிக ஓட்டுகள் பெற்று முதலிடம் பிடித்தார். அவருக்கு பதிலாக, வேறு நபரை தலைவராக்கும் முயற்சியில், சில கோஷ்டி தலைவர்கள் இறங்கினர். காங்கிரஸ் டில்லி மேலிடம், நேர்காணல் நடத்தி முடித்தும், அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இது குறித்து கட்சியின் முன்னாள் நிர்வாகிகள், கட்சி தலைமையிடம் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, முதலிடம் பிடித்த சூரியபிரகாஷ் தலைவராகவும், அடுத்த இடங்களை பிடித்த, அருண் பாஸ்கர், தினேஷ் ஆகியோர் முதன்மை துணைத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.