உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வு நாளில் சஸ்பெண்ட் ரத்து: 2வது முறையாக அரசாணை இனியாவது நடைமுறைக்கு வருமா

ஓய்வு நாளில் சஸ்பெண்ட் ரத்து: 2வது முறையாக அரசாணை இனியாவது நடைமுறைக்கு வருமா

மதுரை: 'ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் ரத்து' என மீண்டும் வெளியிடப்பட்ட அரசாணையை கண்துடைப்பாக இல்லாமல் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு ஊழியர்கள் பணிநிறைவு பெறும்போது அவர்களுக்கு சம்பளம், பணிக்கொடை உட்பட பணபலன்களை கொடுத்து அனுப்புவது வழக்கம். அதேசமயம் பணியில் இருக்கும்போது தவறு செய்திருந்தால் வழக்குகள், முறைகேடு நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும். மனஉளைச்சலை தரும் அதுபோன்ற ஊழியர்கள் அவர்கள் மீதான எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கண்ட பின்பே ஓய்வு பெற முடியும். அவர்களுக்கு எந்த பணபலனும் கிடைக்காது. நடவடிக்கைகள், வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களை பணியின் கடைசி நாளில் 'சஸ்பெண்ட்' (தற்காலிக பணிநீக்கம்) செய்யும் நடவடிக்கை அதிகம் நடக்கிறது. இதனால் 30 முதல் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு நாளின்போது பணபலன் இல்லாமலும், அதன்பின் நடவடிக்கையும் அவர்களை தொடர்வதால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். குடும்பம், சமூகத்திலும் அவர்கள் மீதான பார்வை ஊழியர்களை நிலைகுலைய வைத்து விடும். அப்பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வரை இப்பிரச்னையும் தொடர்கிறது. இதனால் கடைசி நாளில் 'சஸ்பெண்ட்' என்பது கூடாது என அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் கடைசி நாள் சஸ்பெண்ட் இனி கிடையாது என அரசு அறிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கண்துடைப்பான அறிவிப்பு இதனிடையே லஞ்ச ஒழிப்பு விவகார வழக்குகள் தவிர பிற வழக்குகள், 17 ஏ, 17 பி போன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே தீர்வு காண வேண்டும் என நடத்தை விதியில் உள்ளது என்கின்றனர் அரசு ஊழியர்கள். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில பொருளாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியதாவது: இது ஏற்கனவே நடத்தை விதியில் உள்ளதுதான். 2021 ஆண்டிலும் அரசாணை எண் 111ல் இதுபோன்று ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் கூடாது என அறிவித்தனர். அது கண்துடைப்பான அறிவிப்பாக முறையாக நடைமுறைப்படுத்த வில்லை. கடைசி மாதம்தான் நடவடிக்கை எடுக்கின்றனர். இதனால் ஓய்வுநாளில் சஸ்பெண்ட் தொடர்ந்தது. அதுபோன்று இப்போதும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையும் 'ஏட்டுச் சுரைக்காயாக' இல்லாமல் முறையாக நடைமுறைப்படுத்தினால் மகிழ்ச்சியே. ஒருவர் ஓய்வு பெறும் 6 மாதங்களுக்கு முன்பே அனைத்து நடவடிக்கைகளையும் துவக்கி அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டால், ஓய்வு நாளில் சஸ்பெண்டுக்கு அவசியம் இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ