ரூ.10,000 கோடி முதலீட்டை ஈர்க்க தைவானிய தொழிற்பூங்கா: ராஜா
சென்னை:''தமிழகத்தில் சர்வதேச தரத்தில், ஒரு தைவானிய தொழிற்பூங்கா உருவாக்கப்படும். தைவானிய நிறுவனங்களிடம் இருந்து, 10,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதை, இந்த பூங்கா இலக்காக கொண்டிருக்கும்,'' என, அமைச்சர் ராஜா கூறினார்சட்டசபையில் தொழில் துறை அமைச்சர் ராஜா வெளி யிட்ட புதிய அறிவிப்புகள்: தமிழகத்தில் ஈர்க்கப்படும் அன்னிய நேரடி முதலீட்டில் குறிப்பாக, மின்னணு மற்றும் காலனி போன்ற துறைகளில் தைவானிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டுள்ளன. மாநிலத்தில் உள்ள முக்கிய தைவான் நாட்டு நிறுவனங்களுக்கான உதிரிபாகங்களை தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்கு பிரத்யேகமான உற்பத்தி இடம் தேவை என்பதை உணர்ந்து, சர்வதேச தரத்தில், ஒரு தைவானிய தொழிற் பூங்கா உருவாக்கப்படும். மின்னணு உதிரிபாகங்கள், தொழில்நுட்ப ஜவுளி, காலணி உதிரிபாகங்கள் போன்ற தொழில்களில் தைவானிய நிறுவனங்களிடம் இருந்து, 10,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதை, இந்த பூங்கா இலக்காக கொண்டிருக்கும். இதனால், 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்அமெரிக்கா, ஜெர்மனி, தென்கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களுக்கு நேரடி வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு சேவைகள் வழங்க, அந்நாடுகளில் வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வு அமைக்கப்படும்நாகை மாவட்டத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக, 'மினி டைடல் பார்க்' அமைக்கப்படும்கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, வேலுார் மாவட்டம் காட்பாடி ஆகிய நகரங்களில், 'சிப்காட்' தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் திருப்பத்துார், நாட்றம்பள்ளி வட்டத்தில், 125 ஏக்கரில் தோல் அல்லாத காலணி உற்பத்தி பூங்கா உருவாக்கப்படும்திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களை, ஜவுளி மற்றும் ஆடை தயாரிக்கும் தொழில் மையங்களாக உருவாக்க, 'சிப்காட் டெக்ஸ்பார்க்ஸ்' ஆயத்த ஆடை தொழிற்கூட வசதி ஏற்படுத்தப்படும் புதிய சேமிப்பு கிடங்கு அமைப்பதை ஊக்குவிக்க, தமிழக சேமிப்பு கிடங்கு கொள்கை வெளியிடப்படும் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ராஜாமடத்தில், 100 ஏக்கரில் கடல்சார் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி பூங்கா அமைக்கப்படும்.இவ்வாறு அவர் அறிவித்தார்.