கவின் ஆணவக்கொலையால் தமிழகத்திற்கு தலைகுனிவு: கிருஷ்ணசாமி ஆவேசம்
ராமநாதபுரம்: ''திருநெல்வேலி மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவக்கொலையால் தமிழகத்திற்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. தி.மு.க., அவர்களது கொள்கையை விட்டு வெகுதுாரம் சென்று விட்டது,'' என, ராமநாதபுரத்தில் புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் கிருஷ்ணசாமி ஆவேசமாக தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி : வரும் சட்டசபை தேர்தலில் கட்சியை வலுப்படுத்த மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். ராமநாதபுரத்தில் ஆக., செப்.,ல் சுற்றுப்பயணம் தொடர்ந்து நடக்கவுள்ளது. திநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார். இது அப்பட்டமான மனித உரிமை மீறல். தமிழகத்திற்கே தலைகுனிவு. தமிழகத்தில் இதுபோன்று இனியொரு சம்பவம் நடக்க கூடாது என திருச்சியில் புதிய தமிழகம் சார்பில் போராட்டம் நடக்கும். இதுகுறித்து பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., ஹிந்துக்கள் மீது அக்கறை காட்டும் பா.ஜ., இதுவரை வாய் திறக்கவில்லை. தி.மு.க.,வின் கொள்கையான சமத்துவம், சமதர்மம் மற்றும் கலப்பு திருமணம் மூலம் ஜாதி ஒழிப்பு என்ற அடிப்படை கொள்கையை விட்டு அக்கட்சி வெகுதுாரம் சென்று விட்டது. எதிர்கட்சியான அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமியும் பேசவில்லை. கவின் ஹிந்து தானே. அவரது கொலையை ஏன் பா.ஜ., கண்டிக்கவில்லை. ராமநாதபுரம் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இங்குள்ள புது பஸ் ஸ்டாண்டில் கடைகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது. நகராட்சி பிரதிநிதிகள் மனைவி, மகன், தந்தை பெயரில் கடைகளை எடுத்துள்ளனர். இதற்கு பின்னால் தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா இருப்பதாக தகவல் வெளியாகின்றன. கடைகள் ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். 15 நாட்களில் செய்யவில்லை என்றால் ராமநாதபுரத்தில் போராட்டம் நடத்துவோம். ஓட்டு வாங்க பேசும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பேட்டியளித்தார்.