ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம்: மக்களிடம் ஆதார் கோரவில்லை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க., தரப்பு தகவல்
மதுரை:தி.மு.க.,வினர், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் மக்களிடம் ஆதார் விபரங்களை சேகரிக்க தடை கோரிய வழக்கில், 'ஆதார் விபரங்களை சேகரிக்கவில்லை' என, தி.மு.க., தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், அதிகரை ராஜ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: த மிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க., 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்துகிறது. எங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பிற அடையாள அட்டைகளை கேட்டனர். தர மறுத்த போது, வீட் டு பெண்கள் அரசிடம் பெறும், 1,000 ரூபாய் உரிமைத்தொகை நிறுத்தப்படும் என மிரட்டினர். மொபைல் போன் எண்களை கேட்டு வாங்குகின்றனர். எண் கொடுத்ததும், 'ஓரணியில் தமிழ்நாடு' என தகவல் வருகிறது. தொடர்ந்து, ஓ.டி.பி., வருகிறது. அதை தெரிவித்ததும் தி.மு.க.,வில் உறுப்பினராக சேர்ந்ததாக தகவல் வருகிறது. மக்களை தி.மு.க.,வில் சேர வற்புறுத்துகின்றனர். தி.மு.க. ,வில் சேராமல் போனால் தற்போது பெற்று வரும் அரசின் திட்டங்கள் நிறுத்தப்படும் என்கின்றனர். அரசியல் பிரசாரத்திற்காக ஆதார் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவது தவறு. தி.மு.க.,வினர் மக்களிடமிருந்து ஆதார் விபரங்களை சேகரிக்கக் கூடாது. மக்களிடமிருந்து தி.மு.க.,வினர் சட்டவிரோதமாக ஆதார் விபரங்களை சேகரித்தது தொடர்பாக மத்திய அரசு மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணைய தலைமை செயல் அதிகாரி விசாரித்து தி.மு.க.,பொதுச்செயலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். ஜூலை 21ல் நீதிபதிகள் அமர்வு, 'தனியுரிமை மற்றும் விபரங்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் விரிவாக ஆராயப்படும் வரை, 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் ஓ.டி.பி., சரிபார்ப்பு அனுப்புவதை தடுக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என, உத்தரவிட்டது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கே.மகேந்திரன் ஆஜரானார். தி.மு.க., தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன்: ஆதார் விபரத்தை சேகரிக்கவில்லை. உள்நோக்குடன் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் மனுதாரருக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இடைக்கால தடையை நீக்க வேண்டும். தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன்: ஓ.டி.பி., மொபைல் டேட்டா வகைப்பாட்டில் சேராது. ஓ.டி.பி., தற்காலிகம் தான். ஒரு நடைமுறையை இறுதி செய்வதற்குரியது. நீதிபதிகள்: வாடிக்கையாளரை உறுதி செய்வதற்காக தான் ஓ.டி.பி., அது தனியுரிமை சம்பந்தப்பட்டது. அதிலுள்ள டேட்டாக்கள் சம்பந்தப்பட்ட கம்பெனிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சில நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. அதை மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன்: ஆதார் அடிப்படையில் ஓ.டி.பி., பெறுவது குற்றம். பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை. இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆதார் விபரங்களை சேகரிக்கவில்லை என்பதை எழுத்துப்பூர்வமாக தி.மு.க., தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், இந்திய தனித்துவ அடையாள ஆணைய தலைமை செயல் அதிகாரி, தமிழக தலைமை செயலர் ஒருவாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.