உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 400 அமைப்பாளர்கள் திடீர் நியமனம் தமிழக காங்., கோஷ்டிகள் கடும் அதிர்ச்சி

400 அமைப்பாளர்கள் திடீர் நியமனம் தமிழக காங்., கோஷ்டிகள் கடும் அதிர்ச்சி

சென்னை:தமிழக காங்கிரசில், 234 சட்டசபை தொகுதிகளுக்கு, 400 அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய, 77 மாவட்ட தலைவர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதால், முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், அழகிரி, தங்கபாலு ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழக காங்கிரசில் உள்ள, 77 மாவட்ட தலைவர்கள் பதவிகளுக்கு, தலா 5,000 ரூபாய், மாநில நிர்வாகிகள் பதவிக்கு, 1,000 ரூபாய் விருப்ப மனு கட்டணம் செலுத்த, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். அதற்கு, மாவட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டில்லி மேலிடத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மாவட்டத் தலைவர்களாக இருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. அதேநேரத்தில், தற்போதைய மாவட்டத் தலைவர்களுக்கு, 'செக்' வைக்கும் வகையில், சட்டசபை தொகுதிக்கு தலா இரண்டு அமைப்பாளர்கள் என, மொத்தம் 400க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது:தமிழக காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்பு மறுசீரமைக்கப்படுகிறது. இதற்காக, சீரமைப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு, முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, 39 லோக்சபா தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை, செல்வப்பெருந்தகை நியமித்துள்ளார். பீட்டர் அல்போன்ஸ், செல்வப்பெருந்தகை இருவரும் இணைந்து, சட்டசபை தொகுதிக்கு தலா 2 அமைப்பாளர்களை நியமித்துள்ளனர்.இந்த நியமன பட்டியல் நேற்று வெளியானதும், தங்கபாலு, அழகிரி, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, மாணிக்தாகூர், செல்லக்குமார் உள்ளிட்ட கோஷ்டி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்; அவர்களின் ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.அதாவது தற்போதைய, 77 மாவட்டத் தலைவர்களும், இந்த கோஷ்டி தலைவர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்கள். அவர்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில், லோக்சபா தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் சட்டசபை தொகுதி அமைப்பாளர்களுடன் இணைந்துதான் மாவட்ட தலைவர்கள் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட தலைவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் கிராம, நகர, மாநகராட்சி பகுதிகளில், யாரையும் இனி நியமிக்க வாய்ப்பில்லை என்பதால், அவர்களுக்கு பதவி இருந்தும் அதிகாரமில்லை.கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு எடுக்ப்பட்டுள்ள, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை வெற்றி பெறும் வகையில், கோஷ்டிகளை ஒருங்கிணைக்குமா அல்லது பூசலை அதிகரிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை