642 துணை சுகாதார நிலையங்கள் தமிழக அரசு அனுமதி
சென்னை:தமிழகத்தில், 642 நகர மற்றும் கிராம துணை சுகாதார நிலையங்கள் அமைக்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.'மக்கள் தொகைக்கேற்ப, 642 நகர மற்றும் கிராம துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்' என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கிராமங்களில் 617, நகரங்களில் 25 துணை சுகாதார நிலையங்கள் அமைக்க, தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. புதிதாக துவக்கப்படும் துணை சுகாதார நிலையங்களில், ஒரு கிராம சுகாதார செவிலியர் நியமிக்கப்படுவார். வாடகை இல்லாமல், அரசு கட்டடங்கள் ஏதேனும் ஒன்றில், துணை சுகாதார நிலையங்களை அமைக்க வேண்டும் என, சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.