நிலவரி திட்டத்தில் 39,428 நிலங்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு முடிவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை:தமிழகத்தில், 18 மாவட்டங்களில் மாநகராட்சிகள், நகராட்சிகளில், நத்தம் வகைப்பாட்டில் உள்ள நிலங்களுக்கு, நிலவரி திட்டம் அடிப்படையில் பட்டா வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், ஒவ்வொரு கிராமத்திலும் வீடுகள் கட்ட ஒதுக்கப்படும் குடியிருப்பு பகுதிகள், வருவாய் துறையால் நத்தம் நிலமாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்த நத்தம் நிலங்களில் வசித்து வருவோருக்கு பட்டா வழங்கும் திட்டம், 20 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. இதில் ஊரக பகுதிகளில் மட்டும், நிலவரி திட்ட நடைமுறைகளை பின்பற்றி, நத்தம் நிலங்களை ரயத்துவாரி மனைகளாக மாற்றி, பட்டா வழங்கப்படுகிறது. சென்னை போன்ற நகர்ப்புற பகுதிகளில், நகர நிலவரி திட்டம் வாயிலாக, இந்த மனைகளுக்கு பட்டா வழங்க வேண்டும். அரசின் அனுமதி இல்லாததால், இப்பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தன. இது தொடர்பாக, தமிழக வருவாய் துறை பிறப்பித்துள்ள அரசாணை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், 'அ' பதிவேட்டில் கிராம நத்தம், நத்தம், வீடு, வீட்டு மனை என்று நிலங்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்த நிலங்கள், நகர நில அளவை பதிவேட்டில், சர்க்கார் புறம்போக்கு எனவும், அடங்கலில் நத்தம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. எனவே, இப்பகுதிகளில் நகர நிலவரித் திட்டம் செயல்படுத்தப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது. எனவே, நகர நில அளவை பதிவேடுகளில், சர்க்கார் புறம்போக்கு, அரசு மனை என, குறிப்பிடப்பட்ட நிலங்களுக்கு, நகர நிலவரித் திட்டம் வாயிலாக, பட்டா வழங்க உத்தரவிடப்படுகிறது. இதன்படி, செங்கல்பட்டு, கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவாரூர், கோவை, மதுரை, தேனி, தென்காசி, சிவகங்கை, திண்டுக்கல், வேலுார், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில், 22,076 சர்வே எண்கள், உட்பிரிவுகளுக்கு உட்பட்ட நிலங்களுக்கு, சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் அனுமதி பெற்று, நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ், அதன் உரிமையாளர் க ளுக்கு பட்டா வழங்கலாம். இதேபோன்று, சென்னை, திருவள்ளூர், திருச்சி மாவட்டங்களில், 17,352 சர்வே எண்கள், உட்பிரிவுகளுக்கு உட்பட்ட நிலங்களை, ரயத்துவாரி மனை என வகைப்பாடு மாற்றம் செய்து, நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்க, தனி தாசில்தார்களுக்கு உத்தரவிடப்படுகிறது. இதற்காக, நத்தம் நில வரித் திட்ட தனி தாசில்தார் கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, மாவட்ட கலெக்டர்கள் சுற்றறிக்கை பிறப்பிப்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.