பழநி முருகன் மாநாடு செலவு; கணக்கு தராத தமிழக அரசு
தேவகோட்டை: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அளித்த பேட்டி: பழநியில் முருகன் மாநாடு அமைச்சர் சேகர்பாபு, முதல்வர் ஸ்டாலின் பணத்தில் நடத்தப்பட வில்லை. ஹிந்து அறநிலையத்துறை நிதியில் தான் நடந்தது. அந்த மாநாட்டின் செலவு கணக்கை தொடர்ந்து கேட்கிறோம். ஆனால், தமிழக அரசு தரவில்லை. மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை ஹிந்துக்கள், ஹிந்து இயக்கங்கள் நடத்துகின்றன. இந்த மாநாட்டிற்கு கூட்டம் வந்து விடக்கூடாது என்பதற்காக, தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. முருகனின் அறுபடை வீடுகளை ஓரிடத்தில் அமைத்து, அறுபடை வீடுகளில் இருந்து வேல் கொண்டு வந்து பூஜை செய்ய திட்டமிட்டு இருந்தோம். ஆனால், போலீசார் அனுமதி மறுத்தனர். பின், கோர்ட் உத்தரவை தொடர்ந்து மூன்று நாட்களாக பூஜை நடந்து வருகிறது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக விரதம் இருக்கிறார். ஆனால் கூட்டம் வரக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு விரதம் இருக்கிறார். பவன் கல்யாணுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம் என சேகர்பாபு கேட்பது வேடிக்கை. அவர், தமிழகத்தில் படித்து வளர்ந்தவர். சிறு வயது முதல் முருக பக்தராக இருப்பவர். இதை விட வேறு என்ன சம்பந்தம் வேண்டும்? இவ்வாறு கூறினார்.