கோவை: ''மத்திய அரசின் நல்ல திட்டங்கள், தமிழக மக்களுக்கு கிடைக்காமல் தடுக்கிறது தி.மு.க., அரசு,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். பா.ஜ., கோவை கோட்ட அணி பிரிவு நிர்வாகிகள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கோவை, முதலிபாளையத்தில் நேற்று நடந்தது. கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை நகர், நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் என நான்கு பிரிவுகளாக, உதவிகளையும், நல்ல பல திட்டங்களையும், பிரதமர் மோடி வழங்கி வருகிறார். கிராமப்புறங்கள் வரை சென்று, இது குறித்து விளக்க வேண்டும். ஜாதி, மதம் வேறுபாடின்றி அனைவருக்கும் வாய்ப்புகள், திட்டங்களை வழங்குவதே பா.ஜ.,வின் நோக்கம்; குறிப்பாக பெண்களை முன்னிறுத்தி செய்யும் ஆட்சி இது. பொய் பிரசாரத்தை முறியடிக்கணும் நாம் செய்யும் நல்ல காரியத்தை மக்களிடம் சேர்ப்பதுடன், தமிழகத்துக்கு நிதி வருவதில்லை என்ற, தி.மு.க., அரசின் பொய் பிரசாரங்களையும் முறியடிக்க வேண்டும். தி.மு.க., பல ஆண்டுகளாக ஆளுமையில் இருந்த கட்சி. கோவை மாவட்டம் தமிழகத்துக்கு அதிக வருவாய் தருகிறது. இப்படியிருக்க, கோவை மக்கள் எழுந்து நின்று, எங்களுக்கு வரியை எவ்வளவு திரும்ப தருகிறீர்கள் என்று கேட்டால் அரியலுார், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் என்ன ஆகும். தி.மு.க., எந்த மாவட்டத்துக்கு என்ன செய்தது என்று, அக்கட்சியினரை தைரியமாக நீங்கள் கேட்க வேண்டும். தமிழகத்தில் வன்மத்துடன் ஆட்சி நடக்கிறது. பா.ஜ.,வுக்கு பெயர் கிடைத்துவிடும் என்பதற்காக, தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்காமல், மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒரு சீட் கூட கிடைக்காது ஜல்லிக்கட்டை மிருகவதை என தடுத்து நிறுத்தியது காங்., அதற்கு தோழமையாக இருந்தது தி.மு.க., ஜல்லிக்கட்டு போட்டியை மோடி மீட்டு தந்துள்ளார். 'நீட்' வரவிடாமல் தி.மு.க.,வினர் தடுத்தனர். 'நீட்' வந்த பிறகுதான் கிராமப்புற ஏழை மாணவர்கள் டாக்டர் ஆகின்றனர். மத்திய அரசின் நல்ல திட்டங்கள், தமிழக மக்களுக்கு கிடைக்காமல் தடுக்கிறது தி.மு.க., அரசு. தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கவில்லையேல், தேர்தலில் காங்., ஒரு சீட் கூட வாங்க முடியாது. தேசியத்தையும், ஆன்மிகத்தையும் மனதில் வைத்து நடத்தும் கட்சி பா.ஜ., ஒன்றுதான். கூட்டணி ஒற்றுமை 2026 தேர்தலில் திருப்பம் ஏற்படுத்தும் முயற்சியை, அனைவரும் மேற்கொள்ள வேண்டும். நம் கூட்டணி கட்சிகளை பலமாக இழுத்து செல்லும் முயிற்சியிலும் நாம் இறங்க வேண்டும். செல்லும் இடங்களில் எல்லாம் கொடிகளை எடுத்துச் செல்ல வேண்டும். கொடி இல்லையேல் கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக வருவது தெரியாது. கூட்டணி தோழர்களுடன் இணைந்து, மோடியின் திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். நானும் ஒரு தொண்டராகத்தான் பேசுகிறேன்; நான் பா.ஜ.,வின் பணியாளர். இவ்வாறு, அவர் பேசினார். மனசாட்சியோடு!
பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ''தற்போது, தி.மு.க., அரசு மீது மக்களிடம் வெறுப்பு நிலவுகிறது. நமது பயணத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 'பூத்' பணிகளை சிறப்பாகவும், மனசாட்சியுடனும் செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும்,'' என்றார். பா.ஜ., தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஜி.எஸ்.டி.,குறைப்பு
அமைச்சர்
விசாரணை
கூட்டம் முடிந்து புறப்பட்ட நிர்மலா சீதாராமன் சூலுார் பகுதியில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஒன்றுக்கு சென்றார். அங்கு, ஜி.எஸ்.டி., குறைப்புக்கு பிறகு கிடைக்கும் பலன்கள், சலுகைகள் குறித்து கடை உரிமையாளர், வாடிக்கையாளர்களிடம் கேட்டறிந்தார்.
நிதியமைச்சர் நடவடிக்கையால்மீட்கப்பட்ட மீனவர்கள்
மீனவர் அணியின் மாநில தலைவர் சீமா பேசுகையில், ''ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற, 700க்கும் மேற்பட்ட துாத்துக்குடி மீனவர்கள் செப்., 18ம் வங்கக்கடல் புயலில் சிக்கி தவித்தனர். ஆபரேஷன் சிந்துார் காரணமாக, 'சேட்டிலைட் மொபைல்' சேவை முடக்கப்பட்டதால், மீனவர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. இதுகுறித்து நிதியமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். நள்ளிரவு, 2:00 மணிக்கு எங்களை தொடர்பு கொண்ட நிதியமைச்சர், மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுத்தார். கடலில் தத்தளித்த மீனவர்களுக்கு, சேட்டிலைட் மொபைல் சேவை மீண்டும் கிடைக்க, மறுநாள் 19ம் தேதி மாலை அவர்கள் மீட்கப்பட்டனர். தமிழகம், தமிழர்கள் மீது அக்கறை வைத்துள்ள அரசு பா.ஜ.,'' என்றார்.