எஸ்.ஆர்.எம்., ஓட்டல் வழக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
எஸ்.ஆர்.எம்., ஓட்டல் விவகாரம் தொடர்பான புதிய மனுக்கள் மீது பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. திருச்சியில், தமிழக அரசுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து எஸ்.ஆர்.எம்., குழுமம் ஓட்டல் நடத்தி வருகிறது. இந்த இடத்தை காலி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, எஸ்.ஆர்.எம்., குழுமம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'எஸ்.ஆர்.எம்., குழுமம் அரசுக்கு வழங்க வேண்டிய குத்தகை பாக்கி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஒரு உத்தரவு பிறப்பித்து இருந்தோமே, அது என்ன ஆனது?' என, கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த, எஸ்.ஆர்.எம். ஓட்டல் தரப்பு, நிலுவை பாக்கியை செலுத்த உச்ச நீதிமன்றம் ஆறு வாரம் அவகாசம் அளித்துள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து, எஸ்.ஆர்.எம். ஓட்டலின் உரிமத்தை மீண்டும் புதுப்பிப்பது,குத்தகை பாக்கி விவகாரம் உள்ளிட்ட அனைத்து மனுக்களும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் புதிய மனு ஏதேனும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தால், அதற்கு தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -