தமிழக அரசின் இலவச வைபை சேவை மதுரை, கோவையிலும் செயல்படுத்த திட்டம்
சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவை நகரங்களில், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில், இலவச, 'வைபை' சேவை திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.இணையதள பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், 'வைபை' சேவை என்பது அத்தியாவசியமானதாக மாறி வருகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் துவங்கி, பணியில் இருப்போர் வரை, அதிவேக இணையதள சேவையை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மொபைல் எண்ணில், 'ரீசார்ஜ்' செய்து இணைய சேவையை பயன்படுத்தினாலும், 'நெட்வொர்க்' கிடைக்காத இடங்களில் பொதுமக்கள் 'வைபை' சேவையை எதிர்பார்க்கின்றனர்.தமிழக அரசு, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் நகரங்களில் உள்ள முக்கிய இடங்களில், இலவச, 'வைபை' சேவை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு சென்னையில் நடந்த, 'யுமாஜின்' தொழில்நுட்ப உச்சி மாநாட்டில், முதற்கட்டமாக சென்னையில் உள்ள முக்கிய, 500 இடங்களில் இலவச 'வைபை' சேவை அமல்படுத்தப்பட்டது. இவை பூங்கா, பேருந்து நிலையம், கடற்கரை என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாகும். கடந்த ஆண்டு, சென்னையில் படிப்படியாக மெரீனா கடற்கரை, தி.நகர், செம்மொழி பூங்கா, திருவல்லிக்கேணி, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 900க்கும் மேற்பட்ட இலவச, 'வைபை ஹாட்ஸ்பாட் பாயின்ட்'கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சேவையை பயன்படுத்த நினைப்போர் மொபைல் எண்ணுடன் கூடிய ஓ.டி.பி.,யை உள்ளிட்டு, 45 நிமிடம் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.இதன் தொடர்ச்சியாக, மதுரை, கோவை நகரங்களில் முக்கிய இடங்களில், 400 இலவச, 'வைபை ஹாட்ஸ்பாட்' அமைக்க, எல்காட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் தற்போது செயல்பாட்டில் உள்ள வைபை திட்டத்திற்கு, பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. நகரின் முக்கிய இடங்களில் உள்ளவர்கள், இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, 45 நிமிடங்கள் இலவசமாக பயன்படுத்த முடியும். ஒருவருக்கு, 20 எம்.பி.பி.எஸ்., வேகத்தில், 1 ஜி.பி., டேட்டா வழங்கப்படுகிறது.அடுத்த கட்டமாக கோவை, மதுரை நகரங்களில், முக்கிய இடங்களில் இலவச, 'வைபை ஹாட்ஸ்பாட்' அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த நகரங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது. மதுரை மற்றும் கோவையின் முக்கிய இடங்களில் 300 முதல் 400 ஹாட்ஸ்பாட் பாயிண்ட்கள் அமைக்கப்படும். நடப்பாண்டுக்குள் இப்பணி முடிக்கப்படும். அதன்பின் மற்ற நகரங்களில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னையில் வேகம் குறைவு
சென்னையில் 900க்கும் மேற்பட்ட இலவச 'வைபை பாயின்ட்'களை எல்காட் நிறுவனம் நிறுவியுள்ளது. பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்தினாலும். 20 எம்.பி.பி.எஸ்., வேகம் கிடைக்காமல். வெறும் 12 எம்.பி.பி.எஸ்., வரை மட்டுமே வேகம் கிடைக்கிறது. தி.நகர் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இணையதள வேகம் குறைவாக உள்ளது. இது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது, பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது. - நமது நிருபர் -