உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எந்த புள்ளிவிவரத்தை எடுத்தாலும் தமிழகமே முன்னணி மாநிலம்! கோவையில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

எந்த புள்ளிவிவரத்தை எடுத்தாலும் தமிழகமே முன்னணி மாநிலம்! கோவையில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கோவை:கோவையில், 300 கோடி ரூபாயில் அமைய உள்ள நுாலகம் மற்றும் அறிவியல் மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:பொதுமக்களின் வாழ்க்கையுடன் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இரண்டற கலந்திருக்கின்றன. வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள், வாக்களிக்க மனமில்லாதவர்கள் என்கிற எந்த வேறுபாடும் பார்க்காமல், அனைத்து மக்களுக்குமான அரசை நடத்துகிறோம். அதனால், மக்கள் தொடர்ந்து ஆதரிப்பதுடன், எங்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கின்றனர். கடந்த சட்டசபை தேர்தலை விட, லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வின் செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது. இதுவே, பலரும் நம்மை விமர்சிக்க காரணம். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், பொருட்படுத்தாமல் பணியை தொடர்வோம். இன்றைய நவீன தமிழகத்தை உருவாக்கியது, தி.மு.க., ஆட்சி. கடந்த 50 ஆண்டுக்கு முன், ஒரு வட மாநிலமும், தமிழகமும் எப்படி இருந்தது என்று பாருங்கள். இன்றைக்கு, அதே வட மாநிலத்துடன் தமிழகத்தை மறுபடியும் ஒப்பீடு செய்தால் புரியும்.இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் இருக்கிறது. அதிக நகரமயமான மாநிலமாகவும், ஐ.நா.,வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் முதல் மாநிலமாகவும் தமிழகம் உள்ளது.முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில், 20 விழுக்காடு தமிழகத்தில் இருக்கிறது.வறுமையின்மை, பட்டினி ஒழிப்பு, தரமான கல்வி, பாலின சமத்துவம், வேலைவாய்ப்பு, பொருளாதார குறியீடு, தொழில், உள்கட்டமைப்பு, அமைதி, மருத்துவம், மக்கள் நல்வாழ்வு, நுகர்வு, உற்பத்தி என்று எந்தபுள்ளி விவரத்தை எடுத்தாலும், தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்கிறது. கொள்கை, லட்சியத்துடன் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய செயல் திட்டங்களுடன் அரசு நடத்தியதால், இவை சாத்தியமாகின. மக்கள் எங்களுக்கு வழங்கும் உற்சாகமும், ஆதரவும் எங்களை இன்னும் வேகமாக வேலை செய்ய துாண்டும். இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

'வடக்கிற்கு வாரி வழங்குகிறது'

முதல்வர் மேலும் பேசுகையில், ''இயக்கம் ஆரம்பித்தபோது, 'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என அண்ணாதுரை கூறினார். இன்றைக்கு தெற்கை வளர்த்திருக்கிறோம்; இன்னும் ஒருபடி மேலே சொல்ல வேண்டும் என்றால், தெற்கு தான் வடக்கிற்கும் வாரி வழங்குகிறது. அதுவே உண்மை; யாரும் மறுக்க முடியாது. கோட்டையில் உட்கார்ந்தபடி, ஆட்சி நடத்துபவனாக இல்லாமல், களத்தில் இருந்து பணியாற்றுபவன் நான்,'' என்றார்.

ஈ.வெ.ரா., பெயரில் அமைவது ஏன்?

விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:சென்னையில் அண்ணா நுாற்றாண்டு நுாலகம் இருக்கிறது; மதுரையில் கருணாநிதி நுாற்றாண்டு நுாலகம் இருக்கிறது; அவர்கள் இருவரையும் உருவாக்கிய ஈ.வெ.ரா., பெயரில் கோவையில் நுாலகமும், அறிவியல் மையமும் அமைவதே பொருத்தமாக இருக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.

செந்தில்பாலாஜி 'கம்பேக்'

ஸ்டாலின் மேலும் பேசுகையில், ''கோவை மாவட்டத்துக்கு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, 'கம்பேக்' கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி. அவரது சிறப்பான, வேகமான செயல்பாடுகளைப் பார்த்து, நடுவில் சில தடைகளை ஏற்படுத்தினர். அதற்குள் விரிவாக போக விரும்பவில்லை; இது, அரசு நிகழ்ச்சி. அத்தடைகளை உடைத்து, மீண்டும் வந்திருக்கிறார். கோவைக்காக செந்தில்பாலாஜி தொடர்ந்து சிறப்பாக செயல்படுவார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை