உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய இயந்திரம் தமிழகம்: கவர்னர் ரவி பெருமிதம்

நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய இயந்திரம் தமிழகம்: கவர்னர் ரவி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''நாட்டின் வளர்ச்சிக்கு, தமிழகம் முக்கிய இயந்திரமாக பார்க்கப்படுகிறது,'' என, கவர்னர் ரவி தெரிவித்தார். என்.ஐ.ஆர்.எப்., எனும் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த உயர் கல்வி நிறுவனங்கள் முதன்மை இடங்களை பிடித்தன. இதற்கான, பாராட்டு விழா, சென்னை கிண்டி ராஜ்பவனில், கவர்னர் ரவி தலைமையில் நேற்று நடந்தது. இதில், என்.ஐ.ஆர்.எப்., பட்டியலில் முதன்மை இடங்களை பிடித்த கல்வி நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி, கவர்னர் வாழ்த்தி பேசியதாவது: நமது மாநிலத்தில், சிறந்த கல்வி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. அவை ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட்டால், கல்வியில் இன்னும் சிறந்த முன்னேற்றம் காண முடியும். வரும், 2035ம் ஆண்டுக்குள், நாட்டின் உயர் கல்வி மாணவர் சேர்க்கையை, 50 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தமிழகத்தில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை, 50 சதவீத்துக்கும் அதிகமாக உள்ளது. இது, தேசிய சராசரியை விட அதிகம். தற்போது தரத்தை மேம்படுத்துவது மிக அவசியம். நம் மனிதவள திறனை, மேலும் திறமையாக மாற்றினால், அது நாட்டிற்கு முழு வளர்ச்சியை வழங்கும். ஏனெனில், நம் நாடு, தமிழகத்தை வளர்ச்சிக்கான முக்கிய இயந்திரமாக பார்க்கிறது. இது, மாநில வளர்ச்சி மட்டும் அல்லாது, தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கிய இயக்கமாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பேசியதாவது: இன்ஜினியரிங் படிப்புகளுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லை என்பது கிடையாது. சிவில், மெக்கானிக்கல், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் போன்ற இன்ஜினியரிங் படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின்போது கூட, 15 இன்ஜினியரிங் தொழில்நுட்பங்கள் ஒன்றிணைந்து பணியாற்றி வெற்றி காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். பதிவாளர்கள் 'ஆப்சென்ட்' கவர்னர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இதனால், மாநில பல்கலை பட்டமளிப்பு விழாக்களை, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்து வருகிறார். இந்நிலையில், கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த உயர் கல்வி நிறுவனங்களுக்கான பாராட்டு விழாவில், அண்ணா பல்கலை, சென்னை பல்கலை உட்பட முக்கிய பல்கலை பதிவாளர்கள் புறக்கணித்தனர். அவர்களுக்கு பதிலாக, துறை சார்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அழகப்பா பல்கலை துணை வேந்தர் ரவி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணை வேந்தர் ஆறுமுகம் உட்பட சிலர் பங்கேற்றனர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை