அதிக வேலைவாய்ப்பை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்: அரசு
சென்னை: 'குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களை விட, தமிழகம் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வாயிலாக, அதிக வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை:சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அதிக அளவில் துவங்க, ஊக்கம் அளிப்பதன் வாயிலாக, சாதாரண மக்களும் அதிக வேலை வாய்ப்பு பெற்று பயன் பெறுகின்றனர். பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் பல ஆண்டுகளாக முன்னிலையில் இருந்து வரும் குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களை விட, தமிழகம் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வாயிலாக அதிக வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.ரிசர்வ் வங்கியின், 2023 - 24 வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையில், இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், 39,699 சிறு தொழில்கள் உள்ளன. அவை, 4.81 லட்சம் தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை அளித்துள்ளன. இதன் வாயிலாக தமிழகம், 8.48 லட்சம், 'மேன்டேஸ்' எனப்படும் மனித உழைப்பு நாட்களை கொண்டுள்ளது.மஹாராஷ்டிராவில், 26,446 தொழில்களில், 6.45 லட்சம் தொழிலாளிகள் உள்ளனர். அம்மாநிலம், 7.29 லட்சம் மனித உழைப்பு நாட்களை கொண்டுள்ளது. குஜராத்தில், 31,031 தொழில்களில், 5.28 லட்சம் தொழிலாளிகள் உள்ளனர். இம்மாநிலம், 7.21 லட்சம் மனித உழைப்பு நாட்களை கொண்டுள்ளது.தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குதல், அதிக அளவில் உற்பத்தி செய்தல் ஆகியவற்றின் மனித உழைப்பு நாட்களில், குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களை விட தமிழகம் முன்னிலையில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.