| ADDED : டிச 30, 2025 07:21 AM
மதுரை: ''புதிய கல்விக் கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்,'' என, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். மதுரை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக சிறந்த முறையில், காசி தமிழ் சங்கமத்தை நடத்தி வருகிறது. காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடக்கிறது. தமிழ் மொழி மிகப் பழமையானது. நம் கலாசாரத்தின் தொன்மையான மொழி. வட மாநிலங்களில் இருந்து அதிக மாணவர்கள் இங்கு வந்து தமிழ் கற்றுக் கொள்கின்றனர். தமிழகத்திலிருந்து நிறைய ஆசிரியர்கள் வட மாநிலங்களுக்கு சென்று தமிழ் கற்று கொடுக்கின்றனர். தமிழ் மொழி தேசிய ஒருங்கிணைப்புக்கான அடையாளம். கலாசார நிகழ்வுகளில், தமிழக ஆட்சியாளர்களான, தி.மு.க.,வினர் தேவையில்லாத அரசியல் செய் கின்றனர். புதிய கல்விக் கொள்கையை, தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் ஆளும் தி.மு.க., அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அவர்களுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.