தமிழக வாக்காளர்கள் 6.18 கோடியாக உயர்வு
சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 6 கோடி 18 லட்சத்து 90,348 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது இருந்ததை விட, தற்போது 27.67 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, கடந்த அக்., 27ல் துவங்கியது. அப்போது 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் இருந்தனர். ஒரு மாதம் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவை சரிபார்க்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அளித்த பேட்டி:பெயர் சேர்க்க 13 லட்சத்து 88,121 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 13 லட்சத்து 61,888 பேர் பெயர்கள் சேர்க்கப்பட்டன. நீக்கம் செய்ய, 6.43 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 6.02 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 3 கோடி 3 லட்சத்து 96,330 ஆண்கள்; 3 கோடி 14 லட்சத்து 85,724 பெண்கள்; 8,294 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 6 கோடி 18 லட்சத்து 90,348 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 4.32 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள். வாக்காளர் பட்டியலை, elections.tn.gov.inஎன்ற இணையதளத்தில் காணலாம். பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில், படிவம் 6ல் விண்ணப்பிக்கலாம். மேலும், www.voters.eci.gov.inஎன்ற இணையதளத்திலும், 'Voter Helpline App' என்ற மொபைல் போன் ஆப் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். வேட்புமனு தாக்கல் கடைசி நாளுக்கு பத்து நாட்கள் முன்பு வரை, பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பங்கள் பெறப்படும்.அவை பரிசீலிக்கப்பட்டு, துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். சந்தேகங்களுக்கு, மாவட்ட தொடர்பு மையங்களை, '1950' என்ற எண்ணிலும், மாநிலத் தொடர்பு மையத்தை, 1800 42521950 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது, 5.91 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது, 27.67 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். கடந்த அக்டோபரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட, தற்போது 7.59 லட்சம் வாக்காளர்கள், இறுதி பட்டியலில் அதிகரித்துள்ளனர்.
வயது வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை
வயது எண்ணிக்கை18 முதல் 19 வரை 9,18,31320 முதல் 29 வரை 1,08,26,07030 முதல் 39 1,28,47,48940 முதல் 49 1,37,66,56650 முதல் 59 1,10,34,63960 முதல் 69 71,60,09270 முதல் 79 38,70,91080க்கு மேல் 12,51,931
பெண்கள் அதிகம்
தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண்கள், 10 லட்சத்து 89,394 பேர் அதிகம் உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார்
லோக்சபா தொகுதிகளில், அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக, ஸ்ரீபெரும்புதுார் உள்ளது. இதில் 23 லட்சத்து 58,526 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களைக் கொண்ட லோக்சபா தொகுதியாக, நாகப்பட்டினம் உள்ளது. இங்கு, 13 லட்சத்து 38,459 வாக்காளர்கள் உள்ளனர்.