தமிழகத்தை யூனியன் பிரதேசங்களாக பிரித்து விடுவர்: அமைச்சர் சிவசங்கர்
அரியலுார்: ''அ.தி.மு.க., என்ற கட்சியே இல்லாமல் ஆக்குவதே பா.ஜ.,வின் நோக்கம்,'' என, தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அரியலுாரில் நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது: தமிழகத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அ.தி.மு.க.,வை கபளீகரம் செய்து, அவர்கள் தோளில் உட்கார்ந்து கொண்டு, தமிழகத்தில் வலம் வர, பா.ஜ., துடிக்கிறது. அப்படி நுழைந்து விட்டால், ஒட்டுமொத்த அ.தி.மு.க.,வையும் அழித்துவிட்டு, இரண்டாம் இடத்துக்கு வந்து விடலாம், என்ற நோக்கத்தில் பா.ஜ., செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழகத்துக்குள் வர முடியாவிட்டால், தமிழகத்தையும் இரண்டு, மூன்று யூனியன் பிரதேசமாக பிரிப்பதற்கு, அவர்கள் துணிவர். எந்த படுபாதக செயலுக்கும் அஞ்சாத கூட்டம் பா.ஜ., எனவே, முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அதற்காகவே, முதல்வர் ஸ்டாலின், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். தமிழகத்தின் உள்ளே பா.ஜ., நுழையாமல் தடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.