தஞ்சாவூர்:தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின், 13வது துணைவேந்தராக, 2021 டிசம்பர் 11ல் திருவள்ளுவனை, தமிழக கவர்னர் ரவி நியமித்தார். அதே மாதம், 13ம் தேதி அவர் பொறுப்பேற்றார். அவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்.வரும் டிசம்பர், 12ம் தேதியோடு திருவள்ளுவனின் துணைவேந்தர் பதவிக்காலம் நிறைவடைய இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் கவர்னர் ரவி, துணைவேந்தர் திருவள்ளுவனை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் தஞ்சாவூர் வந்து, தன் வீட்டிலிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்துக்கு சென்றார்.கடந்த, 2017- - 2018ம் ஆண்டில், 40 பேர் தகுதி இல்லாமல் பணி நியமனம் செய்யப்பட்டதாக, துணைவேந்தர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, திருவள்ளுவன் அளித்த விளக்கம், கவர்னருக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் தான், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்று தெரிகிறது. இதற்கிடையே, திருவள்ளுவன் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து, கவர்னர் ரவி உத்தரவிட்டுள்ளார். ஆர்ப்பாட்டம்
தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று மாலை, மாணவர் வினோத் பாரதி தலைமையில், பல்கலைக்கழகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'துணைவேந்தரின் பதவிக்காலம் இன்னும், 20 நாட்களே உள்ள நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து கவர்னர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தினர்.