நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் டாஸ்மாக்கின் ரூ.1 கோடியே 15 லட்சம் டெபாசிட் : உயர்நீதிமன்றத்தில் அரசு உத்தரவாதம்
மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திண்டுக்கல் கலெக்டர், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகினர். நிலம் கையகப்படுத்தியதில் இழப்பீடு தாமதம் தொடர்பான விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில், டாஸ்மாக்கின் ரூ.1 கோடியே 15 லட்சத்து 66 ஆயிரத்தை டெபாசிட் செய்வதாக அரசு தரப்பில் உத்தரவாதம் தாக்கல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தில் நான்குவழிச்சாலை திட்டப் பணிக்காக சிலரது நிலம் கையகப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு இழப்பீடு வழங்க திண்டுக்கல் நீதிமன்றம் 2021 ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கலெக்டர் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அக்.,7 ல் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: நிலம் கையகப்படுத்துதல் 2017 ல் நடந்தது. மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் 2023 ல் இந்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. குறைக்கப்பட்ட இழப்பீட்டு தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு இந்நீதிமன்றம் 2025 மார்ச் 14ல் உத்தரவிட்டது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அரசு தரப்பில் கால அவகாசம் கோரியதால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக அரசு தரப்பில் அவகாசம் கோரியும், அவ்வாறு செய்யவில்லை. இந்நீதிமன்ற உத்தரவையும் நிறைவேற்றவில்லை. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகளின் தினசரி முழு விற்பனைத் தொகையை அம்மாவட்ட நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற ஆணையம் / முதன்மை மாவட்ட நீதிபதியிடம் மறு உத்தரவு வரும் வரை டெபாசிட் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர். இதை நிறைவேற்றாததால் கலெக்டர் சரவணன், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன், மாவட்ட மேலாளர் முருகன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி கள்ளிமந்தையம் முத்துக்கல்யாணி மனு தாக்கல் செய்தார். நவ.,5 ல் இரு நீதிபதிகள் அமர்வு,'அக்.,7 ல் பிறப்பித்த உத்தரவு வெளியான அக்.,16 முதல் தற்போதுவரை திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளின் கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். கலெக்டர் உள்ளிட்ட 3 அதிகாரிகளும் ஆஜராக வேண்டும்,' என உத்தரவிட்டது. கலெக்டர் ஆஜர் நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு நேற்று காலை 10:40 மணிக்கு விசாரித்தது. கலெக்டர் சரவணன், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன், மாவட்ட மேலாளர் முருகன், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முத்துக்கணேச பாண்டியன் ஆஜராகினர். அரசு தரப்பு: நிலத்தை டாஸ்மாக் நிர்வாகம் கையகப்படுத்தவில்லை. டாஸ்மாக் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்ற இந்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அது நவ.,10 ல் விசாரணைக்கு வருகிறது. டாஸ்மாக். தனி நிறுவனம். டெபாசிட் செய்வதில் நடைமுறைச் சிரமங்கள் உள்ளன. இவ்வாறு தெரிவித்தது.
அரசு அறிக்கை
அரசு தரப்பு தாக்கல் செய்த அறிக்கை: அக்.,16 முதல் நவ.,5 வரை திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் ரூ.100 கோடியே 57 லட்சத்து 51 ஆயிரத்து 45 க்கு விற்பனையாகியுள்ளது. கொள்முதல் செலவு ரூ.52 கோடியே 44 லட்சத்து 99 ஆயிரத்து 170, அரசுக்கு செலுத்த வேண்டிய வாட் வரி ரூ.46 கோடியே 96 லட்சத்து 85 ஆயிரத்து 738. மீதமுள்ள ரூ.1 கோடியே 15 லட்சத்து 66 ஆயிரத்து 137 ஐ சம்பளம், வாடகை, போக்குவரத்து செலவிற்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டது. நீதிபதிகள்: முதலில் இந்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுங்கள். அரசுக்கு வருமானம் வரும் ஒரே துறை டாஸ்மாக். பகல் 2:00 மணிக்குள் ரூ.1 கோடியே 15 லட்சத்து 66 ஆயிரத்து 137 ஐ டெபாசிட் செய்ய வேண்டும் எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தனர். மீண்டும் பகல் 2:15 மணிக்கு விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில்,'உச்சநீதிமன்றத்தில் எங்கள் உரிமையை நிலைநாட்டும் வகையில் ரூ.1 கோடியே 15 லட்சத்து 66 ஆயிரத்து 137 ஐ டெபாசிட் செய்யத் தயார். இதை அனுமதிக்க வேண்டும்,' என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஏற்கனவே உத்தரவிட்டபடி மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகளின் தினசரி முழு விற்பனைத் தொகையை அம்மாவட்ட நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற ஆணையத்திடம் டெபாசிட் செய்ய வேண்டும். இவ்வழக்கில் அடுத்த கட்ட விசாரணையின்போது கலெக்டர் உள்ளிட்ட 3 அதிகாரிகள் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. விசாரணை நவ.,21 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.