2011 ஐ விட திமுகவுக்கு 10 மடங்கு எதிர்ப்பு அலை உள்ளது: பா.ஜ.,
கோவை; 2011ல் முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக்கு எதிரான மனநிலை அன்று இருந்ததை விட தற்போது 10 மடங்கு எதிராக மனநிலை அதிகமாக நிலவுகிறது என கோவையில் நடந்த 'இந்தியா டுடே தென்னிந்திய மாநாடு' நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ., நிர்வாகி பேசுகையில் குறிப்பிட்டார்.கோவையில் நடந்த 'இந்தியா டுடே தென்னிந்திய மாநாடு' நிகழ்ச்சியில் 2026 தேர்தலில் தமிழகத்தில் வெல்லப்போவது யார் என்ற தலைப்பிலான விவாதத்தில், தி.மு.க. அ.தி.மு.க. பா.ஜ. காங். தரப்பில் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் தரப்பை முன்வைத்தனர். சரவணன், தி.மு.க. செய்தித் தொடர்பாளர்: தமிழ் அடையாளத்தை தி.மு.க., திருடிவிட்டதாகக் கூறுகின்றனர். தி.மு.க.தான் தமிழக கலாசாரத்தின், அடையாளத்தின் பிரதிநிதி. நீட் தேர்வு, மும்மொழிக்கொள்கை போன்றவற்றால் மத்திய அரசு நசுக்கி வரும் நிலையில், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களால் மாணவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். 2026லும் தி.மு.க., வென்று, ஸ்டாலின் முதல்வராகத் தொடர்வார். கோவை சத்யன், அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர்: தி.மு.க.வின் கட்டுக்கதைகளாலும், பொய்யான வாக்குறுதிகளாலும் மக்கள் சலிப்படைந்து விட்டனர். இ.பி.எஸ். ஆட்சியில், கொரோனா, இயற்கைப் பேரிடர்கள் என அவர் ஒவ்வொரு நாளும் சந்திக்காத இடையூறே இல்லை. எனினும், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட தொழில் வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விளைவுதான் இன்று, இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் எட்டியிருக்கிறது. வினோஜ் செல்வம், செயலாளர், பா.ஜ. கட்சிகளுக்கு இடையே கூட்டணி என்பது, கொள்கைக்கு அப்பால் நடப்பது. தேர்தல் எண்ணிக்கைக்கானது. அந்த வகையில், தமிழகத்தில் தி.மு.க. தேர்தல்களை வெல்வதற்கு, எப்படியோ கூட்டணிக் கட்சிகளைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதுதான் ஒரே காரணம். 2024 லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளையும் தி.மு.க. வென்றதற்கு, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ. ஓட்டுகள் பிரிந்ததுதான் காரணம். 2009 லோக்சபா தேர்தலில் தி.மு.க. கணிசமான இடங்களில் வென்றது. ஆனால், 2011ல் பிரதான எதிர்க்கட்சியாகக்கூட வர முடியவில்லை. அப்போதைய முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக்கு எதிரான மனநிலை அன்று அந்தளவுக்கு நிலவியது. அன்று இருந்ததை விட 10 மடங்கு, ஆட்சிக்கு எதிரான மனநிலை அதிகமாக நிலவுகிறது. கடந்த 2021ல் தி.மு.க. கமலஹாசனை உருவாக்கி, ஓட்டுகளைப் பிரித்து, வெற்றி பெற்றது. தற்போது, விஜயை உருவாக்கியிருக்கிறது. அந்த விஜயால்தான் தி.மு.க. மிக மோசமாக பாதிக்கப்படும். தி.மு.க. ஆட்சிக்கு எதிரான மனநிலையும், த.வெ.க.வின் எழுச்சியும், 2026ல், தி.மு.க.வை வீழ்த்தும். லட்சுமி ராமச்சந்திரன், காங். செய்தித்தொடர்பாளர்: ஓர் அரசியல் விவாதத்தை , முதலீடு, வளர்ச்சி, ஜி.டி.பி. என மாற்றியதற்கு தி.மு.க.வின் பாராட்டத்தக்க செயல்பாடுகளே காரணம். தமிழகத்தின் ஜி.டி. 11.19 சதவீதம். இது மத்திய அரசின் புள்ளிவிவரம். தி.மு.க. அரசின் நல்ல நிர்வாகத்தின் பலன்தான் இது. காங். இல்லாமல் தமிழகத்தில் எந்த அரசும் அமைந்து விட முடியாது. அதுதான் நிதர்சனம். பா.ஜ.விலும் வாரிசு அரசியல் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ரூ.2,500 கோடியை விடுவிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் பேசினர்.