உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவிழா நேரங்களில் பஸ்களை இயக்க தனியாருக்கு டெண்டர்!

திருவிழா நேரங்களில் பஸ்களை இயக்க தனியாருக்கு டெண்டர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை, செப். 28- தொடர் விடுமுறை, திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து, 1,600 தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்க, அரசு போக்குவரத்து கழகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன் வாயிலாக, போக்குவரத்து கழகங்களின் செலவை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக, தினமும் 19,300க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக, தினமும் சராசரியாக 1.70 கோடி பேர் பயணம் செய்து வருகின்றனர். கூடுதல் செலவு அரசு பஸ்களை இயக்க நாள்தோறும், 17 லட்சம் லிட்டர் டீசல் செலவாகிறது. டீசல் விலை மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மாதந்தோறும் 500 கோடி ரூபாய் கூடுதல் செலவாகிறது. இதற்கிடையே, அரசு போக்குவரத்து கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்க, பல்வேறு புதிய முயற்சிகளை போக்குவரத்து துறை எடுத்து வருகிறது. அந்த வகையில், பயணியர் தேவை அதிகமாக இருக்கும் போது, தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது; இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இம்முடிவால் போக்கு வரத்து கழகங்களுக்கு 30 சதவீதம் வரை செலவு குறையும் இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தொடர் விடுமுறை, திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில், பல்வேறு நகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊருக்கு செல்வது அதிகரித்து வருகிறது. இந்த குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே பயணியர் கூட்டம் அதிகம் இருக்கும். அதனால், அவர்களின் பயண தேவையை பூர்த்தி செய்ய, அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ், தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக, பஸ் ஓடும் கி.மீ., துாரம் கணக்கீடு செய்யப்பட்டு, அதற்கான தொகை வழங்கப்படும். இந்த திட்டம் ஏற்கனவே ஆந்திரா, குஜராத், டில்லி, ஆமதாபாத் உட்பட, பல வெளிமாநில நகரங்களில் நடைமுறையில் உள்ளது. பெரும்பாலான நகரங்களில், இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து உள்ளது. பராமரிப்பு பணி பஸ்கள் இயக்கம், பணியாளர்கள் சம்பளம், பராமரிப்பு பணி, வரி செலுத்துவது போன்றவற்றை, தனியார் தங்கள் செலவில் மேற்கொள்வர். பயணியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. இதனால், அரசு போக்குவரத்து கழகங்களின் செலவை, 30 சதவீதம் வரை குறைக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளன செயலர் தர்மராஜ் கூறியதாவது: தொடர் விடுமுறை, திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தேவைப்படும் போது, தனியார் பஸ்களை இயக்க, 'டெண்டர்' வெளியிடப்பட்டுள்ளது. ஓராண்டு ஒப்பந்தம் ஒவ்வொரு போக்குவரத்து கழகம் சார்பிலும், தலா, 200 பஸ்கள் என, 1,600 பஸ்கள் வரை இயக்க ஒப்பந்தம் மேற் கொள்வர் என எதிர்பார்க்கப் படுகிறது. நாங்கள் இந்த டெண்டரில் பங்கேற்று, தனியார் பஸ்களை இயக்க ஒப்பந்தம் மேற்கொள்வோம். கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட தனியார் பஸ்களுக்கு, 1 கி.மீ., இயக்க, 51.25 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த முறை இன்னும் கட்டணம் முடிவு செய்யப்படவில்லை. இது, ஓராண்டுக்கான ஒப்பந்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !