உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்பு துறை செயலுக்கு ஐகோர்ட் அதிருப்தி

வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்பு துறை செயலுக்கு ஐகோர்ட் அதிருப்தி

சென்னை,: 'அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும்' என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்காத லஞ்ச ஒழிப்பு துறையின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தது. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.சென்னை, கோவை மாநகராட்சியில், சாலை பணிகளுக்கான டெண்டர்களை, உறவினர்கள், நெருக்கமானவர்களுக்கு வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி, தனியார் நிறுவனங்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, அறப்போர் இயக்கம் தாக்கல் செய்தது.இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ் திலக் வாதாடியதாவது: வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான கே.எஸ்.கந்தசாமி, கே.விஜயகார்த்திகேயன் ஆகியோர் மீது வழக்கு தொடர, மத்திய அரசிடம் இருந்து இன்னும் அனுமதி பெறப்படவில்லை. அனுமதி கோரி விண்ணப்பித்த போது, உள்ளூர் மொழிகளில் உள்ள 12,250 ஆவணங்களையும் மொழிபெயர்த்து சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து, விண்ணப்பத்தை திருப்பி அனுப்பியது. இதுவரை 1,500 பக்கங்கள் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள ஆவணங்களை மொழி பெயர்ப்பு செய்ய, 30 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இப்பணிகளை விரைவில் முடித்து, இரு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க, மத்திய அரசிடம் அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்க, நான்கு வாரம் அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி கோரும் விண்ணப்பத்தை, மத்திய அரசு திருப்பி அனுப்பிய பின் தான், ஆவணங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும் என்பது தெரிய வந்ததாக லஞ்ச ஒழிப்பு துறை கூறுகிறது. இது, ஏற்புடையதல்ல. ஊழல் வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் ஒரு சிறப்பு அமைப்பான லஞ்ச ஒழிப்பு துறை, அத்தகைய தேவைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் விரைவாக நகர்வதில்லை. ஆனால், மற்றவர்கள் மீதான வழக்குகள், 'வந்தே பாரத்' ரயில் போல வேகம் எடுக்கின்றன. இந்த நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில், லஞ்ச ஒழிப்பு துறை தீவிரமாக இல்லை என்பது, வழக்கில் ஏற்பட்ட முன்னேற்றம் வாயிலாக தெரிகிறது. மக்கள் நம்பிக்கையை பெற, முன்னாள் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளை, லஞ்ச ஒழிப்பு துறை தீவிரமாக கருத வேண்டும். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்னாள் அமைச்சர் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என்பதால், இந்த நீதிமன்றம் இன்னும் அதி தீவிரத்தைக் காட்ட வேண்டி உள்ளது. நடைமுறைகளுக்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டால், வழக்கு தன் வலுவை இழந்து விடும். எனவே, லஞ்ச ஒழிப்பு துறைக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. விசாரணை, நவ., 10ம் தேதி தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை