உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜி.எஸ்.டி., குறைப்பு: ஜவுளி, ஆடை தொழில் புதிய சிகரம் தொடும்

ஜி.எஸ்.டி., குறைப்பு: ஜவுளி, ஆடை தொழில் புதிய சிகரம் தொடும்

திருப்பூர்: ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 56வது கூட்டத்தில், நான்கு அடுக்கு ஜி.எஸ்.டி., இரண்டு அடுக்காக குறைக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி முதல் சீரமைக்கப்பட்ட வரி அமலுக்கு வருகிறது; இதை ஆயத்த ஆடை உற்பத்தி துறையினர் வரவேற்றுள்ளனர்.

போட்டித்திறன் வலுப்படும்

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ. பி.சி.,) துணை தலைவர் சக்திவேல்: ஏ.இ.பி.சி., மற்றும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை சார்பில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் வரலாற்று சிறப்பு மிக்க வரி சீர்திருத்த நடவடிக்கையை வரவேற்கிறோம். மத்திய அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும். ஏற்றுமதி ரீபண்ட்களை, ஏழு நாட்களுக்குள் விரைவாக வழங்குதல், ஆயிரம் ரூபாய்க்கு குறைவான ரீபண்ட்களை திரும்பப்பெற அனுமதித்தல் போன்ற முடிவுகள், சரியான நேரத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக உள்ளது. இதனால், ஏற்றுமதியாளர்களின் பண புழக்க நெருக்கடிகள் குறைந்து, வர்த்தக சங்கிலி மேலும் சீராகும். பிரதமர் மோடி, சுதந்திர தின உரையில் தெரிவித்ததுபோன்று, இந்த சீர்திருத்தங்கள் அனைத்தும், நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை நிச்சயம் மேம்படுத்தும். தொலைநோக்கு பார்வையில், ஆயத்த ஆடை உற்பத்தி துறைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் சிறந்த தலைமைக்காக, பிரதமர், நிதி அமைச்சர், தொழில் துறை, ஜவுளித்துறை அமைச்சர் ஆகியோருக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். அரசின் இந்த முற்போக்கு சீர்திருத்தங்கள், இந்திய ஏற்றுமதியாளர்களை வலிமைப்படுத்தி, உலக அளவில் போட்டியிடும் திறனை அதிகரிக்கச் செய்யும்; 'மேக் இன் இந்தியா' என்கிற தேசிய தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்துச்செல்லும் அதேவேளையில், ஜவுளி மற்றும் ஆடை தொழில் புதிய உயரங்களை அடைய உதவும்.

ஏற்றுமதி ஆர்டர் ஈர்க்கலாம்

சுப்பிரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்: செயற்கை நுாலிழை, துணி ஆகியவற்றின் மீது 12 சதவீதம் அளவுக்கு ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டு இருந்தது. இதனால், செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி என்பது வளர்ச்சி பெற சிரமமாக இருந்தது. தற்போது ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி பரவலாக அதிகரிக்கும். சர்வதேச சந்தையில் கூடுதல் ஏற்றுமதி ஆர்டர்களை ஈர்க்கவும் இது துணையாக இருக்கும். பெரும்பாலான ஜவுளி உற்பத்தி மற்றும் சேவை பிரிவுகளில் வரி வேறுபாடாக இருந்து வந்தது; இதனால் வரி செலுத்தும் வகையில், அதிக பொருளாதார தேக்கம் ஏற்பட்டது. அதிக பிரிவுகளுக்கு, 5 சதவீதம் என்ற வகையில் ஒரே மாதிரியான வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. இது, பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், உற்பத்தியாளர்களுக்கும், பல்வேறு ஜாப்ஒர்க் பிரிவுகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். விரைவில், டிஜிட்டல் மயமாக்கப்படும் என அறிவித்துள்ளதால், உள்ளீட்டு வரியினங்களை திரும்ப பெறுவதில் காலதாமதம் ஏற்படாது; சேவைகளும் எளிதாகும். ஜி.எஸ்.டி., வரி சீரமைப்பு அறிவிப்பால், திருப்பூரில் ஏற்றுமதியாளர் மட்டுமின்றி, உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்களும் பயனடைவார்கள. இதுவரை சந்தித்து வந்த சிரமங்கள் இனி இருக்காது; இதேபோல் நாடு முழுவதும் உள்ள ஜவுளி தொழில் துறையினர் அதிகம் பயன்பெறுவர் .

மத்திய அரசின் தீபாவளி போனஸ்

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன்: ஜவுளித்துறை சார்ந்த அனைத்து ஜி.எஸ்.டி.,யிலும் மாற்றம் செய்ததற்காக, மத்திய அரசை பாராட்டுகிறோம். அனைத்து ஜவுளி துணிகள், பருத்தி நுாலுக்கான ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக மாற்றமின்றி தொடர்கிறது. செயற்கை இழை துணிக்கான 18 சதவீத வரி, 5 சதவீதமாகவும்; தையல் நுாலுக்கான 12 சதவீதம், 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு மையத்தில் துணிகளுக்கு சாயமேற்றுவதற்கான சேவை கட்டணத்துக்கான வரி 12ல் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்தம், குறு, சிறு, நடுத்தர ஆடை உற்பத்தியாளர்களின், மூலதன நிதியை மேம்படுத்தும். பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கும், தொழில் துறையினருக்கும் அளித்த, மிகப்பெரிய தீபாவளி போனஸாகவே, வரி குறைப்பு நடவடிக்கையை பார்க்கிறோம்.

தொழில்துறைக்கு விடிவு காலம்

பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல்: பருத்தி பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில், செயற்கை இழைக்கு பலரும் மாற வாய்ப்பு உள்ளது. ஏழு நாட்களுக்குள் ஜி.எஸ்.டி., திரும்பப் பெறலாம் என்ற அறிவிப்பு தொழில்துறையினருக்கு பயனளிக்கும். ஒவ்வொரு முறையும் நாங்கள் வங்கியை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏற்கனவே வைத்த கோரிக்கையின்படி, இறக்குமதி வரிக்கு சரியான தீர்வு கிடைத்துள்ளது. முக்கியமாக, காடா துணி பைகளுக்கு, 12ல் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அமெரிக்காவின், 50 சதவீத வரி விதிப்புக்கு இடையே ஜவுளி தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்று வழிமுறை தேடி தொழில் துறையினர் ஆலோசித்து வரும் நிலையில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி., வரி குறைப்பு அறிவிப்பு மிகப்பெரும் சுமையை இறக்கி வைத்துள்ளதாக கருதுகிறோம். ஜி.எஸ்.டி., கு றைப் பு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்த தமிழக அரசுக்கும், முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மொத்தத்தில், ஜி.எஸ்.டி., வரி குறைப்பு நடவடிக்கையால் தொழில் துறைக்கு ஒரு விடிவு காலம் கிடைத்துள்ளது. இக்கட்டான இக்காலகட்டத்தில், நாட்டு மக்களின் நலன் மீது அக்கறை கொண்டு ஜி.எஸ்.டி., வரி குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு நன்றி கூறுகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D Natarajan
செப் 05, 2025 06:17

ஏழை, எளிய மக்களுக்கு மிக உதவியாய் இருக்கும். 5% வரம்பை 5000 ஆக உயர்த்தினால் மிக அதிகம் மக்கள் பயன் பெறுவர்


புதிய வீடியோ