உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரலாறு, பண்பாடு முக்கியத்துவம் வாய்ந்த நுாலகமானது தஞ்சை சரஸ்வதி மஹால்

வரலாறு, பண்பாடு முக்கியத்துவம் வாய்ந்த நுாலகமானது தஞ்சை சரஸ்வதி மஹால்

சென்னை:ஆசியாவின் பழமையான நுாலகங்களில் ஒன்றான தஞ்சை சரஸ்வதி மஹால் நுாலகம், வரலாறு மற்றும் பண்பாடு முக்கியத்துவம் வாய்ந்த நுாலகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை சரஸ்வதி மஹால் நுாலகத்தில், 300 ஆண்டுகளுக்கு மேலாக சேகரிக்கப்பட்ட தமிழ், தெலுங்கு, மராத்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளின், 10,000க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள், 30,000க்கும் மேற்பட்ட அச்சு நுால்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றை பராமரிக்கும் பணியில், 60க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வந்தனர். தற்போது, 20க்கும் குறைவானவர்களே பணியில் உள்ளனர். ஏற்கனவே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய ஓலைச்சுவடிகள் காணாமல் போனது குறித்து புகார்கள் உள்ளன. இந்நிலையில், நுாலக வளர்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்காததால், ஓலைச்சுவடிகள் சிதைந்து போவதாக வரலாற்று ஆய்வாளர்கள் புகார் கூறி வந்தனர். முக்கியத்துவம் சமீபத்தில் தஞ்சை சென்ற முதல்வர் ஸ்டாலினிடம் இது குறித்து விளக்கப்பட்டது. அவர், சரஸ்வதி மஹால் நுாலகத்திற்கு நிதி ஒதுக்கி சீரமைக்க உறுதி அளித்தார். இதையடுத்து, தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் ஆய்வு நுாலகம், வரலாறு மற்றும் பண்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளிக்கல்வி துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள உத்தரவு: தமிழக பொது நுாலக சட்ட விதிகளின் கீழ், அரசு உதவி பெறும் நுாலகமாக, தஞ்சை சரஸ்வதி மஹால் நுாலகம் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, ஆய்வு மற்றும் வெளியீடுகள், கைப்பிரதிகளை பாதுகாப்பது, நுாலகம் மற்றும் அருங்காட்சியகத்தை பராமரித்து மேம்படுத்துவது, ஓலைச்சுவடிகளை பாதுகாப்பது, அவற்றை மின்னணு வடிவில் மாற்றி சேமிப்பது உள்ளிட்ட முக்கிய பணிகள் மேற்கொள்ளப்படும். உதவித்தொகை மேலும், நிர்வாக செலவுகள் மற்றும் செயல்பாடுகளுக்காக உதவித்தொகையும், நுாலக பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்கப்படும். அதேவேளை, நுாலகத்தின் வருவாய் மற்றும் செலவுகளுக்கான கணக்குகள், ஆண்டுதோறும் தகுதியான ஆய்வாளர் வாயிலாக சரிபார்க்கப்பட வேண்டும். புதிய திட்டங்கள் அல்லது மேம்பாடுகளை மேற்கொள்வதற்கு முன், நுாலக இயக்குநரின் அனுமதி பெற வேண்டும். உதவித்தொகை, செலவுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, நுாலக இயக்குநர் அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை