'டாஸ்மாக்' நிறுவன தலைமை அலுவலகம், மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் உட்பட, 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நேற்று நிறைவடைந்தது. இந்தச் சோதனையில், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, அதிரவைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வசம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hwuembbl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் நிறுவனமானது, மது ஆலைகளில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்து, மாநிலம் முழுதும் உள்ள, 4,830 சில்லரை மதுக்கடைகளுக்கு வினியோகம் செய்கிறது. தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு மேலாக மது பானங்கள் விற்பனையாகின்றன. டாஸ்மாக் சார்பில், ஏழு ஆலைகளில் இருந்து பீர், 11 ஆலைகளில் இருந்து மற்ற மதுபானங்கள் கொள்முதலாகின்றன. இந்த மது ஆலைகளை எல்லாம், தி.மு.க., முக்கிய புள்ளிகளும், அவர்களுக்கு வேண்டியவர்களுமே நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில், பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடப்பதாகவும், மத்திய அரசின் அமலாக்கத்துறைக்கு புகார்கள் சென்றன. அதனால், கடந்த மூன்று நாட்களாக, டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம், டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.மற்ற இடங்களில் முன்னதாகவே சோதனையை முடித்தாலும், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், நேற்று அதிகாலை 1:30 மணியளவில் தான் சோதனையை நிறைவு செய்தனர்.அதுமட்டுமின்றி, இந்தச் சோதனையின் போது, சென்னை பாண்டிபஜார், திலக் தெருவில் உள்ள, தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானதாக கூறப்படும், 'அக்கார்டு டிஸ்லரிஸ் அண்டு பிரிவரீஸ்' மது ஆலை அலுவலகத்தில், கட்டுக்கட்டாக ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். அதேபோல, தி.மு.க., மேலிடத்திற்கு மிகவும் வேண்டியவர் என்று கூறப்படுபவர், எஸ்.என்.ஜெயமுருகன். இவரின், எஸ்.என்.ஜே., மதுபான குழுமத்தின் தலைமை அலுவலகம், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்படுகிறது. அங்கிருந்தும், போலி ரசீதுகள், கலால் வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். தி.மு.க.,வை சேர்ந்த மிக முக்கிய புள்ளி ஒருவரின் நெருங்கிய நண்பர் வாசுதேவன். இவரது கால்ஸ் குழுமத்தின் சென்னை தலைமை அலுவலகம், தி.நகரில் செயல்படுகிறது. அங்கு மட்டும் மூன்று நாட்களாக, கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து வந்திருந்த, 25க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், கலால் வரி ஏய்ப்பு தொடர்பாக, கட்டுக்கட்டாக ஆவணங்களை எடுத்துள்ளனர். எம்.ஜி.எம்., என்ற மதுபான ஆலை மற்றும் அதன் தலைமை அலுவலகத்திலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. தி.மு.க.,வின் முக்கிய புள்ளிகள் மற்றும் அவர்களுக்கு வேண்டிய நபர்கள் நடத்தும் மதுபான ஆலைகளில் இருந்து தான், டாஸ்மாக் நிறுவனம், 75 சதவீத மதுபானங்களை கொள்முதல் செய்துள்ளது. இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மதுபான கொள்முதலில் மட்டுமின்றி, சட்டவிரோதமாக பார்களிலும், மது விற்பனை செய்து மோசடி நடந்துள்ளது. சில்லரை கடைகளுக்கு, தனியார் மது ஆலைகள் சார்பில், 'கியூ ஆர்' கோடு வைத்து வசூல் வேட்டை நடந்துள்ளது. எங்களின் சோதனையில் கணக்கில் வராத, 50 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 'டாஸ்மாக்' முறைகேடு தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார், 2016 - 2021 வரை பதிவு செய்த, 35க்கும் மேற்பட்ட வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துள்ளோம். இதில், தொடர்புடைய எல்லோரிடமும் விசாரணை செய்ய உள்ளோம். நட்சத்திர ஹோட்டல்களில், மது பார்கள் நடத்த உரிமம் வழங்கியதிலும் முறைகேடு நடந்துள்ளது. அதுபற்றியும் விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.***
முறைகேடு நடந்தது எப்படி?
அமலாக்கத்துறை சோதனை குறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் சிலர் கூறியதாவது: 'டாஸ்மாக்' நிறுவனம் சார்பில், குறிப்பிட்ட சில மதுபான ஆலைகளில் இருந்து, அதிக அளவில் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. அத்துடன், மது ஆலைகளில் இருந்து, எவ்வித ரசீதும் இல்லாமல், நேரடியாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளுக்கு, மதுபானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதனால், அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆவணங்கள், அமலாக்கத்துறை சோதனையில் சிக்கி இருந்தால், டாஸ்மாக் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்யும் போது, முழு விபரங்கள் தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
விற்பனை தகவல்கள் மறைப்பு
கிருஷ்ணசாமி குற்றச்சாட்டுபுதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமியின் அறிக்கை: மதுபான ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும், ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும், எந்த அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதில், வெளிப்படைத்தன்மை இல்லை. மேலும், கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களுக்கு, ஆயத்தீர்வை வசூலிக்கப்பட்டு அரசு கஜானாவில் செலுத்தப்படும். தற்போது தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும், மொத்த மதுபானங்களில், 60 சதவீத சரக்குகளுக்கு மட்டுமே, ஆயத்தீர்வை வசூல் செய்யப்படுகிறது. மீதுமுள்ள, 40 சதவீத சரக்குகள், ஆயத்தீர்வை வசூலிக்கப்படாமல், கள்ளத்தனமாக விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இதன் வாயிலாக, மதுபான ஆலை அதிபர்களும், அரசியல் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களும், பெரும் பயன் அடைகின்றனர். அரசுக்கு வர வேண்டிய வருவாய், அரசியல் பிரமுகர்களின் கஜானாவை நிரப்புகிறது. மதுபான கொள்முதலில் மட்டும், ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடக்கிறது. இதனால், அரசுக்கு 25,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆண்டுக்கு, 45,000 முதல் 50,000 கோடி ரூபாய் வரை வரி வருவாய் ஈட்டக்கூடிய துறை, நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கு காட்டப்படுகிறது. மதுபான உற்பத்தி செலவுடன், பாட்டில், மூடி, லேபிள் ஆகியவற்றுக்கு, அதிக விலை நிர்ணயம் செய்து, அவற்றில் கிடைக்கும் லாபத்தை, ஆளும் கட்சியின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள், அபகரித்து கொள்கின்றனர். இவற்றில் மட்டுமே ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடக்கிறது. ஒவ்வொரு மதுபான ஆலையில் இருந்தும், கொள்முதல் செய்யக்கூடிய மதுபானங்கள், எந்தெந்த சில்லரை விற்பனை கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன என்பது குறித்த எந்த தகவலும் அரசிடம் இல்லை. திட்டமிட்டு விவரங்கள் மறைக்கப்படுகின்றன.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். - நமது நிருபர் -