பாம்பே ஓ ரத்தப்பிரிவு மகனுக்கு தாயின் சிறுநீரகம்
சென்னை:'பாம்பே ஓ' என்ற அரிய ரத்த வகையைச் சேர்ந்த 30 வயது மகனுக்கு சிறுநீரகம் மாற்ற வேண்டியிருந்தது. அதனால், 'பி' ரத்தப்பிரிவு உடைய அவரது தாயின் சிறுநீரகத்தை பொருத்தி, மியாட் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.இது குறித்து, மியாட் சிறுநீரகவியல் பிரிவு இயக்குனர் டாக்டர் ராஜன் ரவிசந்திரன் கூறியதாவது:மியாட் மருத்துவமனையில், சிறுநீரக செயலிழப்பால் அனுமதிக்கப்பட்ட மதுரை நபருக்கு, பாம்பே ஓ வகை ரத்தம். அவருக்கு, அதே ரத்தப்பிரிவு உள்ள ஒருவரின் சிறுநீரகம் கிடைப்பது சாத்தியம் இல்லாதது.அதனால், அவரது தாயின் சிறுநீரகத்தை பொருத்த முடிவு செய்தோம். உலகில் முதல் முறையாக, வேற்று ரத்த பிரிவில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் சவாலை, அந்த குடும்பத்தினர் ஏற்றனர். இந்த அறுவை சிகிச்சை பெரும் சவாலாக அமைந்தது.மகனின் ஆரம்ப ஆன்டி, எச் ஆன்டிபாடி டைட்டர்களை உகந்த நிலைக்கு குறைத்து, அறுவை சிகிச்சையை ஜப்பானிய தொழில்நுட்ப உதவியுடன், வெற்றிக்கரமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன் முடித்தோம். தொடர்ந்து கண்காணித்து வந்தோம். தற்போது அவர் பூரண குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.இச்சிகிச்சைக்கு பின் மறுவாழ்வு பெற்ற நபர், மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாசை சந்தித்து நன்றி தெரிவித்தார்.