மேலும் செய்திகள்
பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறி: முதல்வர் ஸ்டாலின்
7 hour(s) ago | 52
மெட்ரோ ரயிலில் எடுத்து வரப்பட்ட நுரையீரல்
15 hour(s) ago | 4
சென்னை : ''தமிழகத்தில் லோக்சபா தேர்தல், ஒரே கட்டமாக ஏப்ரல், 19ல் நடக்க உள்ளது. வேட்பு மனு தாக்கல் வரும், 20ம் தேதி துவங்க உள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.தலைமைச் செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் லோக்சபா தேர்தல், ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. அனைத்து தொகுதிகளுக்கும், ஏப்.,19ல் ஓட்டுப்பதிவு நடக்கும். அன்றைய தினம், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடத்தப்படவுள்ளது. தபால் ஓட்டு
வேட்பு மனு தாக்கல், வரும், 20ல் துவங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய, 27ம் தேதி கடைசி நாள். வேட்பு மனுக்கள் பரிசீலனை 28ம் தேதி நடக்கும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற, 30ம் தேதி கடைசி நாள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அனைத்து மாவட்டங்களிலும், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்படும். வாக்காளர்களில், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம், அவர்களின் வீட்டிற்கு சென்று தபால் ஓட்டு பெற உள்ளோம்.இதற்கான விண்ணப்பத்தை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வழங்குவர். அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினால், அவர்களின் வீடு தேடிச்சென்று, தபால் ஓட்டு பெற நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் கமிஷன், அனைத்து மாநிலங்களிலும் விபரங்களை கேட்டு, தேர்தல் தேதியை முடிவு செய்துள்ளது. கடந்த முறை இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த மாநிலங்களில், தமிழகம் இடம் பெற்றது. இம்முறை முதல் கட்ட தேர்தல் நடக்கும் மாநிலங்களில் இடம் பெற்றுள்ளது. துணை ராணுவம்
வழிபாட்டு தலங்களில், ஓட்டு கேட்கக்கூடாது. சமூக வலைதளங்களில், தவறான தகவல்களை பரப்பினால் காவல் துறை வழியே நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் கமிஷனும் தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்கும். இதுவரை 25 கம்பெனி துணை ராணுவம் வந்துள்ளது. டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் நடப்பதை கண்காணிக்கவும், தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. ரூபாய் 50,000
ஒருவர் ரொக்கமாக, 50,000 ரூபாய் வரை மட்டுமே எடுத்துச் செல்லலாம். ஓட்டுப்பதிவுக்கு ஒரு வாரத்திற்கு முன், 'பூத் சிலிப்' வழங்கப்படும். புதிய அரசாணை வெளியிடக்கூடாது. புதிய பணிகள் துவக்கக் கூடாது. அமைச்சர் பதவியேற்பு தொடர்பாக கடிதம் வந்தால், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் கூறும் உத்தரவுக்கு ஏற்ப, நடவடிக்கை எடுக்கப்படும். டிசம்பர், 12 வரை, வாக்காளர்கள் 100 சதவீதம் பேருக்கு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. டிசம்பருக்கு பின் 5 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவர்களுக்கும் அடையாள அட்டை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், பிற ஆவணங்களை காண்பித்து ஓட்டளிக்க முடியும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடி வளாகத்திலும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ, ஒரு உதவியாளர் நியமிக்கப்படுவார். தமிழகத்தில், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், தலா மூன்று பறக்கும் படை, மூன்று கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி, காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதரணி பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் இணைந்தார். அதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால், தி.மு.க., - எம்.எல்.ஏ., பொன்முடி பதவி இழந்தார். அவர் வெற்றி பெற்ற திருக்கோவிலுார் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்தது. எனவே, அவர் மீண்டும் எம்.எல்.ஏ., ஆனதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது.அவரை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்த முதல்வர், அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி, கவர்னருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இந்நிலையில், நேற்று தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் தொடர்பாக வெளியிட்ட பத்திரிகை செய்தியில், இடைத்தேர்தல் நடக்க உள்ள தொகுதிகள் பட்டியலில், தமிழகத்தில் விளவங்கோடு, திருக்கோவிலுார் ஆகிய இரண்டு தொகுதிகள் பெயரும் இடம் பெற்றிருந்தன.அதேநேரம் தேர்தல் அட்டவணையில், தமிழகத்தின் விளவங்கோடு தொகுதி மட்டும் இடம் பெற்றிருந்தது. திருக்கோவிலுார் இடம் பெறவில்லை. இதனால், திருக்கோவிலுாருக்கு இடைத்தேர்தல் உண்டா, இல்லையா என, குழப்பம் ஏற்பட்டது.இதுகுறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், ''விளவங்கோடு தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நடக்க உள்ள தொகுதிகளுக்கான இணைப்பு பட்டியல் சரியாக இருந்தது. பத்திரிகை செய்தியில், திருக்கோவிலுார் இடம் பெற்றிருந்தது. பின்னர் அது மாற்றி வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
7 hour(s) ago | 52
15 hour(s) ago | 4