முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு வீடு முதல்வர் வழங்கினார்
சென்னை:திருவள்ளூர் மாவட்டம் பாக்கத்தில், முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு, அரசு சார்பில் கட்டப்பட்ட வீட்டு சாவியை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.திருவள்ளூர் மாவட்டம் மோரை ஊராட்சி, வீராபுரத்தைச் சேர்ந்த ஸ்டீபனின் மகள் தான்யாவின் அறுவை சிகிச்சை செலவு முழுவதையும், முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமல்லாது, தான்யாவின் பெற்றோருக்கு இலவச வீட்டுமனை வழங்கி, அரசின் சார்பில் வீடு கட்டித்தர ஆணையிட்டார்.அதைத் தொடர்ந்து, திருவள்ளூர் பாக்கம் கிராமத்தில், மூன்று சென்ட் வீட்டுமனை வழங்கப்பட்டது. அதில், தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, வீடு கட்டப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், புதிய வீட்டிற்கான சாவியை, தான்யாவின் தாய் சவுபாக்கியாவிடம், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், பூந்தமல்லி, பானவேடு தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அனுசுயாவிற்கு தானியங்கி சக்கர நாற்காலியையும் முதல்வர் வழங்கினார்.துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் நாசர், தலைமை செயலர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.