உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்ணையாறு தீர்ப்பாயம் அமைப்பு 21ம் தேதி டில்லியில் முதல் கூட்டம்

பெண்ணையாறு தீர்ப்பாயம் அமைப்பு 21ம் தேதி டில்லியில் முதல் கூட்டம்

சென்னை:உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள பெண்ணையாறு தீர்ப்பாயத்தின் முதல் கூட்டம், 21ம்தேதி டில்லியில் நடக்கிறது.கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் பெண்ணையாறு, தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி வழியாக பயணித்து வங்கக்கடலில் கலக்கிறது. பெண்ணையாற்றின் கீழ் பகுதியில் உள்ள மாநிலங்களின் அனுமதியின்றி, நீரை தடுக்கும் கட்டமைப்புகளை கர்நாடகா மேற்கொள்ளக்கூடாது என்றவிதி உள்ளது.அதை மீறி பெண்ணையாற்றில் நீரை தடுக்கும் கட்டுமானங்களை கர்நாடக நீர்வளத்துறை தொடர்ந்து செய்து வருகிறது. தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே, பெண்ணையாற்று நீரை பகிர்ந்து கொள்வதில் உள்ள பிரச்னைக்கு தீர்வு காண, மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தற்போது தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு உள்ளது. தீர்ப்பாயத்தின் தலைவராக, மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் குஷ்விந்தர் ஹோரா நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தவிர தீர்ப்பாயத்தில், ஏழு உறுப்பினர்கள் இடம்பெற உள்ளனர். தமிழக பிரதிநிதியாக, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா நியமிக்கப்பட்டு உள்ளார். இக்கூட்டத்தில் அவர் பங்கேற்க முடியாத பட்சத்தில், சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் பங்கேற்பார். இதேபோல, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநில நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர்களும், மத்திய வேளாண்துறை இணை செயலர், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற துறையின் இணை செயலர், மத்திய ஜல்சக்தி துறை இயக்குனர் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மட்டுமின்றி மத்திய நீர்வள ஆணையத்தின் பாசன மேலாண்மை அமைப்பின் தலைமை பொறியாளர், உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். பெண்ணையாறு தீர்ப்பாயத்தின் முதல்கூட்டம் வரும் 21ம் தேதி டில்லியில் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்