உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவாரூரில் அமைகிறது முதலாவது டெக்ஸ் பார்க் ஜவுளி நிறுவனங்களுக்கு தயார்நிலை தொழிற்கூடம் 

திருவாரூரில் அமைகிறது முதலாவது டெக்ஸ் பார்க் ஜவுளி நிறுவனங்களுக்கு தயார்நிலை தொழிற்கூடம் 

சென்னை : பெண்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்குடன் திருவாரூர், நாகை உட்பட ஐந்து மாவட்டங்களில், தயார் நிலை தொழிற்கூட வசதியுடன், 'டெக்ஸ் பார்க்கை' 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைக்க உள்ளது. முதல் பார்க், திருவாரூரில் அமைக்கப்பட உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, சேலம், சென்னை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் ஜவுளி உற்பத்திக்கு முக்கிய மையங்களாக உள்ளன. மேலும், திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களையும் ஜவுளி தொழில் மையங்களாக மாற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக, அம்மாவட்டங்களில் ஜவுளி தொழில் கூட்டமைப்புகள் உடன் இணைந்து, 'சிப்காட் டெக்ஸ் பார்க்' என்ற பெயரில், 'பிளக் அண்டு பிளே' எனப்படும் தயார் நிலை தொழிற்கூட கட்டமைப்பு வசதிகளை அமைக்க, சிப்காட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதலாவது, டெக்ஸ் பார்க், திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெண்களின் வேலைவாய்ப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கிலும், திருவாரூர், நாகை உட்பட ஐந்து மாவட்டங்களை ஜவுளி மையங்களாக உருவெடுக்கவும், சிப்காட் டெக்ஸ் பார்க் அமைக்கப்பட உள்ளது. திருவாரூரில் 5 ஏக்கரில் முதலாவது டெக்ஸ் பார்க் அமைக்கப்படும். இது, தயார் நிலை தொழிற்கூடங்களை உள்ளடக்கிய கட்டடங்களாக இருக்கும். இதன் வாயிலாக, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறைந்த முதலீட்டில் விரைவாக தொழில் துவங்க முடியும். உள்ளூரில் வசிக்கும் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ