அதிகபட்சமாக ரூ.5 லட்சம் பயிர் கடன் தருகிறது அரசு
சென்னை:'நடப்பாண்டில், 17,000 கோடி ரூபாய் வரை பயிர்க்கடன் வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள், இணையவழியில் விண்ணப்பித்த அன்றே, துவக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வாயிலாக, பயிர்க் கடன் வழங்கும் முன்மாதிரியான திட்டத்தை, கடந்த 17ம் தேதி தர்மபுரியில், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அரசு இ- - சேவை மையத்துக்குச் சென்று, விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர் எண் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்புக் கணக்கு எண் கொடுத்தால் போதுமானது. இந்த விண்ணப்பம், வருவாய் மற்றும் வேளாண் துறையால் சரிபார்க்கப்பட்டு, அன்றைய தினமே கடன் தொகை, விவசாயிகளி ன் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தில், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 5 லட்சம் ரூபாய் வரை பயிர்க் கடன் வழங்கப்படுகிறது. இதுபோலவே, சுய உதவிக் குழுக்கள், சிறு, குறு கடன்களுக்கான நடைமுறையும் எளிமைப்படுத்தப்படும். கடந்த ஆண்டில், 17 லட்சத்து, 37 ஆயிரம் விவசாயிகளுக்கு, 15,062 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்புப் பிரிவின் கீழ், 4 லட்சத்து 43,000 பேருக்கு, 2,645 கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு, 17 ஆயிரம் கோடி ரூபாய் வரை பயிர்க் கடன் வழங்கப்படும்; அதில், 3,000 கோடி ரூபாய் கால்நடை வளர்ப்பு பிரிவின் கீழ் கடன் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.