மேம்பால துாண்கள் இஷ்டத்திற்கு இடமாற்றம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை வறுத்தெடுத்தது ஐகோர்ட்
கோவை:கோவை - அவிநாசி ரோட்டில், 10.1 கி.மீ., துாரத்துக்கு கட்டப்படும் மேம்பாலத்தில், தனியார் ஹோட்டலுக்கு சாதகமாக நான்கு துாண்களை இடம் மாற்றியது, ஐகோர்ட் விசாரணையில் தெரியவந்தது. இதை மாவட்ட சாலை கமிட்டி ஒப்புதல் இன்றி, நெடுஞ்சாலை துறையினர் தன்னிச்சையாக மேற்கொண்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டப்படுகிறது. நான்கு இடங்களில் ஏறு தளங்கள் மற்றும் இறங்கு தளங்கள் கட்டப்படுகின்றன. இந்த தளங்கள் அமையும் இடங்களில், 91 துாண்கள் கட்ட வேண்டும். ஒவ்வொரு துாணுக்கும் இடையே, 30 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். போலீஸ் பயிற்சி பள்ளி மைதானம் முன் துவங்கும் ஏறுதளத்துக்கான துாண்கள், தனியார் ஹோட்டல் முன்புறம் இடம் மாற்றப்பட்டுள்ளன. ஹோட்டல் நிறுவனத்துக்கு சாதகமாக இத்தகைய மாற்றம் செய்திருப்பது, சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில் ஊர்ஜிதமானது. விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, 'நான்கு துாண்களை ஏற்கனவே திட்டமிட்டபடி, 30 மீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும். விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள இரண்டு துாண்களை தரைமட்டத்துக்கு இடித்து அகற்ற வேண்டும். புதிதாக அமைக்கும் துாணில், 'வாய்மையே வெல்லும்' என்ற வாசகம் எழுத வேண்டும். 'உண்மையின் துாண்கள்' என அழைக்க வேண்டும்' என, உத்தரவிட்டார். எந்தவொரு பகுதியிலும் மேம்பாலம் கட்டுவதற்கு முன், பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். ஆட்சேபனை இருந்தால் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல், நெடுஞ்சாலைத்துறையினர் முடிவெடுத்து, துாண்களை இடம் மாற்றம் செய்ததால், தற்போது பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஒப்புதல் பெற்ற வடிவமைப்பை மாற்ற வேண்டுமெனில், தொழில்நுட்ப கமிட்டி ஆய்வு செய்து அறிக்கை வழங்க வேண்டும். கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் விவாதித்து, ஒப்புதல் கொடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இக்கமிட்டியில் ஒப்புதல் பெறாமல், இத்தகைய மாற்றங்கள் செய்து, அறிக்கை தாக்கல் செய்திருப்பது, விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும், தற்போது கட்டியுள்ள துாண்களை இடித்து விட்டு, ஒரிஜினல் இடத்தில் கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ள ஐகோர்ட், இதற்கான செலவினத்தை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் வசூலிக்கலாம் என்றும் கூறியுள்ளது. அதனால், நெடுஞ்சாலைத்துறையினர் மேல்மு றையீடு செய்துள்ளனர். இதுதொடர்பாக, கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு க மிட்டி உறுப்பினரான கதிர்மதியோன் கூறுகையில், ''மேம்பாலம் வடிவமைத்ததும் மக்களிட ம் கருத்து கேட்க வேண்டும். ஒப்புத ல் பெற்ற வடிவமைப்பை, மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி ஒப்புதல் இன்றி மாற்றக்கூடா து. ' 'ஒப்புதல் பெறாமல், தங்கள் விருப்பத்தற்கேற்ப சில அதிகாரிகள் மாற்றம் செய்திருக்கின்றனர். இது, மக்கள் நலனுக்கு எதிரா னது; கண்டிக்கத்தக்கது, '' என்றார்.